ஐபிஎல் 2023 தற்போது முடிவடைந்த நிலையில், 29 வயதான இந்திய பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர், காஞ்சிபுரத்தில் அவரது விடுமுறையை அனுபவிக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 இல் வெங்கடேஷ் ஐயர்
சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2023ல் வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணிக்காக பேட்டை சுழற்றி, அற்புதமாக ஆடினார். அவரிடம் இருந்து ஒரு அபாரமான செஞ்சுரியும் வந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர், 14 போட்டிகளில் 404 ரன்கள் குவித்தார், இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். அதோடு பிரண்டன் மெக்கல்லத்திற்குப் பிறகு ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் அந்த அணிக்காக சிறப்பாக ஆடினாலும், கொல்கத்தா அணி பிளேஆஃப்களுக்குச் செல்லத் தவறியது. அதுமட்டுமின்றி புள்ளிகள் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் வெங்கடேஷ் ஐயர்
ஐபிஎல் 2023 தற்போது முடிவடைந்த நிலையில், 29 வயதான இந்திய பேட்ஸ்மேன், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் அவரது விடுமுறையை தற்போது அனுபவித்து வருகிறார். அதற்கான படங்கள் இணையத்தில் வெளியாகி பலரை கவர்ந்தது. இன்ஸ்டாகிராமில், வெங்கடேஷ் ஐயர் காஞ்சிபுரத்தில் இளம் வேத பாட சாலை மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
வெங்கடேஷின் பதிவு
"விளையாட்டின் மீதான இந்த காதல் நம்பமுடியாதது. காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து இளம் வேத பாட சாலை மாணவர்களுடன் விளையாடிய சிறந்த நேரம்" என்று அந்த பதிவின் தலைப்பில் அவர் எழுதியுள்ளார். வெங்கடேஷ் ஐயர் தனது முழு ஐபிஎல் வாழ்க்கையில் மொத்தம் 36 போட்டிகளில் விளையாடி 956 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் ஒரு சதம் மற்றும் 7 அரைசதங்கள் அடித்துள்ளார். இது தவிர, அவர் இந்திய அணிக்காக இரண்டு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஹர்பஜன் சிங் கருத்து
முன்னதாக ஐபிஎல் போட்டியின் போது, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை விளாசி வெங்கடேஷ் ஐயரை பாராட்டினார். "வெங்கடேஷ் ஐயர் ஒரு சிறந்த வீரர், அதனை தனது முதல் ஐபிஎல் சதத்தின் மூலம் நிரூபித்தார். டேவிட் வார்னர் மற்றும் கேஎல் ராகுல் போன்ற பேட்ஸ்மேன்கள் கூட அவரது இன்னிங்ஸிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். "வெங்கடேஷ் ஐயர் அந்த சதத்திற்கு பின் தனது அணிக்கு பெரிதாக பங்களிக்கவிலை என்றாலும், 200 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன்களை எடுத்தார்," என்று மேலும் கூறினார்.