உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நிறுத்துமாறு தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான 15வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் இந்த உலகக்கோப்பையில் கலந்து கொண்டது. இதில் லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியும், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வென்றும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று (நவம்பர் 19) குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண அஹமதாபாத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
மேலும் இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி, வெளிநாட்டு தூதர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் என பலரும் நரேந்திர மோடி மைதானத்துக்கு வருகை தர உள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் மைதானத்தில் கண்கவர் நிகழ்ச்சிகள், விமானப்படையினரின் சாகசங்கள், லேசர் ஷோ உள்ளிட்ட பல நிகழ்வுகளும் ரசிகர்களுக்கு கண்களுக்கு விருந்து படைக்க உள்ளது.இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 3வது முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்த இந்திய அணி முனைப்புடன் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என நாடு முழுவதும் வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் போட்டியை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இறுதிப்போட்டியை நிறுத்த வேண்டுமென தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி( எஸ்.எப்.ஜே) அமைப்பின் தலைவரான குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோவில், ‘இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெறும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பேசியுள்ளார். மேலும் 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை, 2002 ஆம் ஆண்டின் குஜராத் கலவரம் பற்றியும் பேசியுள்ளார்’
குர்பத்வந்த்சிங் பன்னுன் வீடியோ வெளியிடுவது இது முதல்முறையல்ல .ஏற்கனவே உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியை முன்னிட்டு இருநாட்டுக்கும் பகையை தூண்டும் வகையில் பேசியதாக அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் குர்பத்வந்த்சிங் பன்னுன் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: பகையுடன் காத்திருக்கும் இந்தியா..? பதம் பார்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா.. வெற்றி யாருக்கு..?