India vs Australia World Cup Final 2023: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.


உலகக் கோப்பை இறுதிப்போட்டி:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக் கோப்பை கடந்த மாதம் 5ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் நடைபெறும் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.  


இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்:


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். இறுதிப்போட்டியை முன்னிட்டு மைதானத்தில் இந்திய விமானப்படையின் சாகசம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும் போட்டியை காண மைதானத்திற்கு வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, 1999ம் ஆண்டிற்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற பின் ஒரு முறை கூட தோல்வியையே சந்திக்கவில்லை. அதேநேரம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2003ம் ஆண்டு தோல்விக்கு பழிவாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என நம்பப்படுகிறது.


பலம் & பலவீனங்கள்:


12 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி, தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். எந்தவொரு அநாவசியமான முயற்சிகளையும் செய்யாமல், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். ஷமி, பும்ரா ஆகியோர் வேகத்தில் மிரட்ட, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் சுழலில் விக்கெட் வேட்டை நடத்தி வருகின்றனர். உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் இறுதிப்போட்டியில் விளையாடுவது, இந்திய அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. மறுமுனையில். முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் லீக் சுற்றின் முடிவில் தொடர் வெற்றிகளை குவித்தது. வார்னர். டிராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்கின்றனர். நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை. ஜாம்பா மட்டும் விக்கெட் வேட்டை நடத்தியுள்ளார். ஏராளமான நாக்-அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவம் ஆஸ்திரேலிய அணிக்கு கை கொடுக்கலாம்.


நேருக்கு நேர்:


சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 150 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்திய அணி 57 வெற்றிகளையும், ஆஸ்திரேலியா அணி 83 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது . 10 போட்டிகளில்  முடிவு எட்டப்படவில்லை. உலகக் கோப்பையில் விளையாடிய 13 போட்டிகளில் ஆஸ்திரேலியா 8 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.


மைதானம் எப்படி?


1.30 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், இன்று ரசிகர்களால் நிரம்பி வழிய உள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமாக இன்றைய ஆடுகளம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நேரம் செல்ல செல்ல பந்துவீச்சாளரக்ளும் சாதிக்கக் கூடும்.


உத்தேச அணி விவரங்கள்:


இந்தியா:


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்


ஆஸ்திரேலியா:


டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்கிலிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்


வெற்றிக்கான வாய்ப்பு: இந்திய அணி வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளது.




மேலும் படிக்க: IND vs AUS Final Score LIVE: பகையுடன் காத்திருக்கும் இந்தியா..? பதம் பார்க்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா.. வெற்றி யாருக்கு..?