ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றுவதன் மூலமாக மட்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறிய நிலையில் அவரை ஜோக்கர் என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.


விராட் கோலியிடம் ஆரஞ்சு தொப்பி:


ஐபிஎல் சீசன் 17-ல் அதிக ரன்கள் விளாசியதன் மூலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்  விராட் கோலி ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார். இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 741 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.


இவர் 583 ரன்களை இந்த சீசனில் குவித்திருந்தார். அதன்படி முதல் இடத்தில் இருக்கும் விராட் கோலிக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் வீரருக்கும் இடையிலேயே 150 ரன்கள் வித்தியாசம் உள்ளது.


பெங்களூரு அணி கோப்பையை இதுவரை எந்த சீசனிலும் வென்றதில்லை என்றாலும் விராட் கோலியின் ஆதிக்கம் மட்டும் எல்லா சீசன்களிலும் இருக்கும்.  அதேபோல் ஐபிஎல் சீசனில் இரண்டு முறை ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரே இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலியிடம் தான் இருக்கிறது. 


கோலியை விமர்சித்த முன்னாள் சி.எஸ்.கே. வீரர்:


இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விராட் கோலி மற்றும் ஆரஞ்சு தொப்பி குறித்து பேசுகையில், “ஒரு அணியில் அனைவரின் பங்களிப்பும் இருந்தால் தான் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியும். ஐ.பி.எல். தொடரில் இதுபோல் பலமுறை பார்த்திருக்கிறோம். அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு தொப்பியை வெல்வதால் மட்டுமே ஐ.பி.எல். தொடரை வென்றிட முடியாது.


மற்ற வீரர்களும் 300 ரன்கள், 400 ரன்களை சேர்க்க சேர்க்க வேண்டும். ஆர்.சி.பி. அணியில் விராட் கோலி நிச்சயம் ஜாம்பவான் அந்தஸ்தில் இருக்கும் வீரர் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் விராட் கோலியின் தரம், மற்ற இளம் வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும். அதனால் விராட் கோலி சற்று நிதானம் காக்க வேண்டும். அப்போது தான் இளம் வீரர்களால் நல்ல மனநிலையில் விளையாட முடியும்” என்று கூறியிருந்தார்.  


நீங்கள் ஒரு ஜோக்கர் ராயுடு:


இச்சூழலில் இது போன்ற ஒரு கருத்தை கூறிய அம்பத்தி ராயுடுவை அதே நிகழ்வின் பேதே கெவின் பீட்டர்சன் மற்றும் மேத்யூ ஹைடன் இருவரும் சேர்ந்து, “ நீங்கள் ஒரு ஜோக்கர் அம்பத்தி ராயுடு, ஒரு முறை ஜோக்கராக இருக்கும் நீங்கள் எப்போதும் ஜோக்கர் தான் “ என்று  அம்பத்தி ராயுடுவை விமர்சித்துள்ளனர். அதற்கு முன்பு அம்பத்தி ராயுடு பீட்டர்சனை பார்த்து ஏதோ கூறினார். அதன் காரணமாகவே அவரை பீட்டர்சன் அவ்வாறு விமர்சித்தார். கெவின் பீட்டர்சன் முன்னாள் ஆர்.சி.பி. வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.