சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு ஷாருக்கானும் "சி.எஸ்.கே.. சி.எஸ்.கே" என்று கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற கொல்கத்தா:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.


இதில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருந்தது கொல்கத்தா அணி.


இச்சூழலில் தான் 12 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் தங்களது வரலாற்று சாதனையை பதிவு செய்திருக்கிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.


நன்றி தெரிவித்த ஷாருக்கான்:


இந்த வெற்றிக்கு பின்னர் சேப்பாக்கம் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு கொல்கத்தா அணி வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள் நன்றி தெரிவித்தனர்.


அதேபோல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இணைஉரிமையாளரும், பாலிவுட் சூப்பர்ஸ்டாருமான ஷாருக் கான், அவரின் மனைவி கெளரி கான், அவரின் மகள் சுகானா கான், மகன் ஆர்யன் கான் ஆகியோரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.  


மைதானத்தில் எழுந்த சி.எஸ்.கே கோஷம்:


அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஷாருக் கான் தனது ஐகானிக் போஸையும் செய்து உற்சாகப்படுத்தினார். மைதானத்தின் ஒரு பகுதியில் சென்னை அணியின் ரசிகர்கள் "சிஎஸ்கே.. சிஎஸ்கே" என்று கோஷம் எழுப்பினர்.


அப்போது சிஎஸ்கே அணியின் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு நடிகர் ஷாருக் கானும், "சிஎஸ்கே.. சிஎஸ்கே" என்று கோஷம் எழுப்பினார்.






இது அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுப்பது போல் அமைந்தது. கொல்கத்தா அணியின் உரிமையாளராக இருந்தாலும் சிஎஸ்கே அணியினருடன் சேர்ந்து கோஷம் எழுப்பிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க: T20 World Cup: கதிகலங்கும் ஜாம்பவான்கள்! கற்றுக்கொடுக்குமா கத்துக்குட்டி அணிகள்? உலகக்கோப்பையில் நடக்குமா அதிசயம்?


 


மேலும் படிக்க: IPL 2024 Final: ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிசிசிஐ.. லட்சக்கணக்கான ரூபாய் வெகுமதி..!