டி 20 உலகக் கோப்பை:


கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் நடந்து முடிந்துள்ளது ஐபிஎல் சீசன் 17. இதில் மூன்றாவது முறையாக ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. இச்சூழலில் அடுத்ததாக ரசிகர்களை குஷிப்படுத்த இருப்பது டி20 உலகக் கோப்பை. 


விளையாடும் அணிகள்:


வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க உள்ள இந்த போட்டிகள் ஜூன் 29 ஆம் வரை நடைபெற உள்ளது. இதில், ஆசிய நாடுகள் சார்பில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள் நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகள் சார்பில் நமீபியா, ஓமன், தென்னாப்பிரிக்கா, உகாண்டா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் சார்பில் இங்கிலாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து வட அமெரிக்கா சார்பில் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளும், கரீபீயன் நாடுகள் சார்பில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளும் டி20 உலக்க கோப்பையில் விளையாட உள்ளன. 


ஜாம்பவான் அணிகளை மிரட்டும் கத்துக்குட்டி அணிகள்:


இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் திறமையான அணிகளாக உலா வருகின்றனர். ஆனால், இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ள கத்துக்குட்டி அணிகள் சில ஜாம்பவான் அணிகளை மிரட்டி வருகிறது. 


அதாவது அமெரிக்க அணி தற்போது வங்கதேச அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடியது. இதில் வங்கதேச அணியை 2க்கு 1 என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது அமெரிக்கா அணி. கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் வங்கதேச அணியை மிரட்டி இருந்தது அமெரிக்கா. அந்த போட்டியில் 20 ஓவர்கள் களத்தில் நின்ற வங்கதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.


பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கிய அமெரிக்கா 19.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேச அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதேபோல் மே 23 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


அதேபோல் மே 10 ஆம் தேதி நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது அயர்லாந்து அணி. இப்படி கத்துக்குட்டியான அணிகள் ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி வருகிறது. இது டி20 உலகக் கோப்பையிலும் எதிரொளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


மேலும் படிக்க: IPL 2024 Final: ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு ஆஃபர்களை அள்ளிக்கொடுத்த பிசிசிஐ.. லட்சக்கணக்கான ரூபாய் வெகுமதி..!


மேலும் படிக்க: கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி; நிறைவடைந்த லீக் போட்டி - எந்தெந்த அணிகள் வெற்றி?