இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 4வது போட்டியில் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. ராஞ்சி டெஸ்டில் இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அறிமுகமானார். அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பிற்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஆகாஷ் தீப்பிற்கு இந்திய அணியின் தொப்பியை வழங்குவதற்கு முன் ஊக்கப்படுத்தினார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இதையடுத்து ஆகாஷ் தீப் கூறுகையில், இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாட வேண்டும் என்பதே எனது கனவு. இந்த நேரத்தில் என் குடும்பம் இங்கே உள்ளது. இதை விட பெரிதாக எதுவும் இருக்க முடியாது” என தெரிவித்தார்.
இந்திய அணிக்காக ஆகாஷ் தீப் அறிமுகம் ஆனதற்கு பின் தனது அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் நுழைந்தவுடன் முதல் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஆகாஷ் தீப் ஈர்த்தார். இதில் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகியோரின் விக்கெட்களை தூக்கினார். சர்வதேச போட்டிகளில் அறிமுகமானால் ஆகாஷ் தீப்பிற்கு இந்த பாதை எளிதாக அமையவில்லை.
2015 ம் ஆண்டு துயர ஆண்டு:
2015ம் ஆண்டு ஆகாஷ் தீப்பிற்கு மிகவும் துயரமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் அவர் தனது தந்தை மற்றும் சகோதரர் என இருவரையும் 3 மாதங்களுக்குள் இழந்தார். தந்தை மாரடைப்பால் உயிரிழக்க, அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிறகு அவரது சகோதரரும் விபத்தில் உயிரிழந்தார். அப்போது, ஆகாஷ் தீப் வீட்டில் பணம் இல்லை. இதனால், ஆகாஷ் தீப் அவரது தாய் மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மூன்று வருடங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார்.
ஒரு கட்டத்தில் ஆகாஷ் நீண்ட நாட்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடியாது என்று உணர்ந்துள்ளார். இதையடுத்து பீகாரில் இருந்து கொல்கத்தா சென்று பெங்கால் கிரிக்கெட் அணியில் விளையாட தொடங்கியுள்ளார். கொல்கத்தா சென்ற அவருக்கு தங்க இடம் இல்லை. இதையடுத்து, 4 பேருடன் இணைந்து 12*12 என்ற அறையில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
ஆகாஷ் 2019 இல் பெங்கால் அணிக்காக தனது முதல் முதல் தர போட்டியில் விளையாடினார். அதே ஆண்டில், அவர் லிஸ்ட் ஏ மற்றும் டி20 வடிவங்களில் அறிமுகமாகும் வாய்ப்பும் கிடைத்தது.
ஆகாஷின் முதல் தர போட்டி:
சர்வதேச கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்பு, ஆகாஷ் தீப் பெங்கால் அணிக்காக 30 முதல் தர போட்டிகளில் விளையாடி, 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேசமயம், 28 லிஸ்ட் ஏ போட்டிகளில் 42 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் 41 டி20 போட்டிகளில் 48 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆகாஷ் ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.