ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள், கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் சுற்று சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு உள்ளிட்ட, இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் நடைபெற்றன. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உடன் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன.


பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் இறுதிப்போட்டி: 


லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.  பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.


இதையடுத்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு சிறையில் உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானை தவிர்த்து உலகக் கோப்பையை வென்ற அனைத்து கேப்டன்களுக்கும் ஐசிசி, பிசிசிஐ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. 


கபில் தேவை அழைக்கவில்லையா?


ஆனால், இறுதி போட்டிக்கு தன்னை அழைக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய கபில் தேவ், "நான் அழைக்கப்படவில்லை. அவர்கள் என்னை அழைக்கவில்லை அதனால் நான் செல்லவில்லை. அவ்வளவுதான். 


83 உலகக்கோப்பை அணி முழுவதும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால், அது ஒரு பெரிய நிகழ்வு என்பதாலும், பொறுப்புகளை கையாளுவதில் மக்கள் மிகவும் மும்முரமாக இருப்பதாலும், சில சமயங்களில் அவர்கள் மறந்திருப்பார்கள் என நான் நினைக்கிறேன்" என்றார்.


மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினர் இறுதி போட்டியை கண்டுகளித்து வரும் நிலையில், இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாவதற்கு முக்கிய காரணமான கபில் தேவ், போட்டிக்கு  அழைக்கப்படாதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.


கபில் தேவ் தலைமையில், இந்தியா அணி தனது முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையை கடந்த 1983ஆம் ஆண்டு கைப்பற்றியது. புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் நட்சத்திர வீரர்கள் நிறைந்த மேற்கிந்தியத் தீவுகளை 140 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து, 60 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.


இன்றைய இறுதி போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்காக அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.