ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்துக்கொண்டு இருந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள், விமானப்படை வீரர்களின் வானவேடிக்கைகள் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் தொடங்கியது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்ஸை ரோகித் சர்மா சுப்மன் கில் கூட்டணி தொடங்கியது. இந்திய அணிக்கு இருவரும் இணைந்து ஓரளவிற்கு நல்ல தொடக்கத்தினை ஏற்படுத்தி தந்தனர். நிதானமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கில் தனது விக்கெட்டினை போட்டியின் 5வது ஓவரில் 4 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த விராட் கோலி முதல் ஓரிரு பந்துகள் நிதானமாக ஆடினார். அதன் பின்னர் ஸ்டார்க் வீசிய ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அமர்க்களப்படுத்தினார். 


பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி சிக்ஸர்கள் பறக்கவிட்டு வந்த ரோகித் சர்மா 31 பந்தில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த ஸ்ரேயஸ் ஐயர் ஒரேயொரு பவுண்டரி மட்டும் விளாசி தனது விக்கெட்டினை இழந்தார். 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளிக்கத் தொடங்கியது. இதனால் களத்தில் இருந்த விராட் - கே.எல். ராகுல் கூட்டணி மிகவும் நிதானமாக விளையாடியது. இவர்கள் கூட்டணி 88 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லாமல் 50 ரன்கள் எடுத்தனர். போட்டியின் 11வது ஓவரில் இருந்து 26வது ஓவர் வரை இந்திய அணி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. 27வது ஓவரில் கே.எல். ராகுல் பவுண்டரி விளாசினார். நிதானமாக ஆடி 56 பந்துகளில் விராட் தனது அரைசத்தினை எட்டினார். சிறப்பாக ஆடி வந்த அவர் பேட் கம்மின்ஸ் வீசிய 63 பந்தில் 54 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி வந்த கே.எல். ராகுல் 86 பந்துகளில் தனது அரைசத்தினை எட்டினார். 


அதன் பின்னர் வந்த ஜடேஜா தடுமாற்றமாக ஆடி வந்தார். இறுதியில் அவரும் ஹசில் வுட் பந்தில் தனது விக்கெட்டினை 9 ரன்களில் இழந்து வெளியேறினார். 27வது ஓவருக்குப் பின்னர் இந்திய அணி 39வது ஓவர் வரை பவுண்டரி விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் கூட்டணியாக இருந்தது கே.எல். ராகுல் - சூர்யகுமார் யதவ் கூட்டணிதான். 


இந்த கூட்டணியும் 42வது ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் பிரிந்தது. 107 பந்துகளை எதிர்கொண்ட கே.எல். ராகுல் 66 ரன்களில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 6 பேட்ஸ்மேன்களும் தங்களது விக்கெட்டினை இழந்த பின்னர் ஒட்டுமொத்த பொறுப்பும் சூர்யகுமார் யாதவ் மீது விழுந்தது. 


நீண்ட நேரம் களத்தில் இருந்த அவரும் ஏமாற்றம் அளிக்க இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளும் ஹசில் வுட், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.