உலகக்கோப்பை தொடருக்கான கேப்டன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில், டிம் சவுதி உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.
உலகக்கோப்பை தொடர்:
உலகக்கோப்பை ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் தொடரை நடத்தும் இந்தியாவோடு, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இங்கிலாந்து என 10 அணிகள் பங்கேற்க உள்ளன. தொடரில் 45 லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 48 போட்டிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெற உள்ளன. போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.
நியூசிலாந்து அணி அறிவிப்பு:
உலககோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணி விவரங்களை ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட்ட நாடுகள் அறிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது நியூசிலாந்து அணி நிர்வாகமும் 15 பேர் கொண்ட தங்களது அணியை அறிவித்துள்ளது. அதில், கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக களமிறங்கிய வ்ல்லியம்சன், முதல் போட்டியிலேயே ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். அவர் முழுவதுமாக காயத்திலிருந்து குணமடைந்தாரா என்பது தெரியாத நிலையிலேயே, தற்போது உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார். இதன் மூலம், 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக செயல்பட்டவர்களில், இவர் ஒருவர் மட்டுமே 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் கேப்டனாக செயல்பட உள்ளார்.
முதல் வாய்ப்பு:
கேப்டன் வில்லியம்சன் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி ஆகியோருக்கு இது நான்காவது உலகக்கோப்பை தொடராகும். சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ் மற்றும் வில் யங் ஆகியோர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக விளையாடுகின்றனர். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணிக்காக பேட்டிங் செய்த ஜிம்மி நீஷம் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். போல்ட், மாட் ஹென்றி மற்றும் துணை கேப்டன் டாம் லாதம் ஆகியோர் மூன்றாவது உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.
வீரர்களின் விவரங்கள்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, வில் யங்
உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி:
2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, அதற்கடுத்த இரண்டு உலகக்கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்ற நியூசிலாந்து அணி, 2019ம் ஆண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை சூப்பர் ஓவர் முறையில் இங்கிலாந்திடம் பறிகொடுத்தது. இந்நிலையில் நடப்பாண்டாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. செப்டம்பர் 29ம் தேதி ஐதராபாத்தில் பாகிஸ்தானுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் நியூசிலாந்து அணி, அக்டோபர் 5ம் தேதி தொடரின் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.