இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டமானது மழை காரணமாக நேற்று முழுமையாக முடியவில்லை. இப்போட்டி ரிசர்வ் டே அதாவது இன்று நடைபெறவுள்ளது. இன்றைய ரிசர்வ் நாளிலும் இந்தியா - பாகிஸ்தான் முழுமையாக நடக்க முடியாமல் ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும்..? இது நடந்தால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? இதற்குப் பிறகு என்ன புள்ளிகள் இந்திய அணிக்கு கிடைக்கும் என்ற அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.


ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வருமா?


இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் கொழும்பு மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நாளிலும் தொடர்ந்து மழை பெய்தால் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். இதன்மூலம் 2 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளையும், இந்திய அணி 1 போட்டியில் விளையாடி 1 புள்ளியுடன் இருக்கும். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணி இலங்கை மற்றும் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதையடுத்து, இந்திய அணி இலங்கை மற்றும் வங்கதேசத்தை வீழ்த்தினால் 5 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.


ஏதேனும் ஒரு போட்டியில் இந்திய அணி தோற்றால்.. 


இலங்கை அல்லது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தால், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். பாகிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. சூப்பர்-4 சுற்றில் வங்கதேசம் இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஷாகிப் அல் ஹசன் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இலங்கை தனது முதல் சுப்பர்-4 சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதன் மூலம் தசுன் ஷனக்க அணி 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிடும்.


போட்டி சுருக்கம்: 


முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இரு வீரர்களும் ஐம்பது ரன்களை கடந்து அவுட்டாகினர். 


பிரேமதாசா மைதானத்தில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படும் போது, ​​இந்தியா 24.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. இப்போட்டி இங்கிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் முறையே 08 மற்றும் 17 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.