கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
பாகிஸ்தான் - நியூசிலாந்து:
2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் கராச்சி நகரில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.
பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130.5 ஓவர்களில் 438 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான் அணி. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக அகா சல்மான் சதம் விளாசினார்.
இரட்டைசதம்:
நியூசிலாந்து தரப்பில் கேப்டன் சவுதீ 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல், பிரேஸ்வெல், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூசிலாந்து அணி 194.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 612 ரன்களை குவித்தது.
கேன் வில்லியம்சன் இரட்டை சதம் விளாசினார். மொத்தம் 21 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 395 பந்துகளில் 200 ரன்களை வில்லியம்சன் விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு 5வது இரட்டை சதம் ஆகும்.
194.5ஆவது ஓவரில் அவர் தனது 5வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
அதைத் தொடர்ந்து கேப்டன் சவுதீ டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 612 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 174 ரன்கள் பின்னிலையுடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.
தெ.ஆ.- ஆஸ்திரேலியா:
முன்னதாக, டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தநிலையில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.