டீன் எல்கர் தலைமையிலான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 


இந்தநிலையில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.


முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணொ 189 ரன்களில் சுருண்டது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 2வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 389 ரன்கள் எடுத்திருந்தது. 


டிராவில் ஹெட் 48 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து, 3வது நாளான நேற்று ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் 51 ரன்கள் எடுத்திருந்தபோது நோர்டியா வீசிய பந்தில் கிளீன் போல்டானார். இதையடுத்து, தனது 100 வது டெஸ்டில் 200 ரன்கள் குவித்த டேவிட் வார்னர், களமிறங்கி, தான் சந்திந்த முதல் பந்திலேயே போல்டானார். தொடர்ந்து ஒருபுறம் விக்கெட்கள் சரிய, மறுபுறம் நங்கூரமாய் நின்று அலெக்ஸ் கேரி தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை பதிவு செய்தார், 2013 ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆஸ்திரேலியா அணி 500 ரன்களை கடந்தபோது 111 ரன்களில் அலெக்ஸ் கேரி வெளியேற, அதனை தொடர்ந்து 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி டிக்ளர் செய்தது. 






386 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஆரம்பமே அடி சறுக்கியது. கேப்டன் டீன் எல்கர் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்து உள்ளே வந்த டி புருன் 3 ரன்களுடன் நடையை கட்டினார். அதோடு மழை குறுக்கிட்டதால் அன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. 


தொடர்ந்து, நாளாவது நாளான ஆட்டம் இன்று தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணியில் விக்கெட்கள் வரிசையாக சரிய, தேம்பா பாவுமா மட்டும் ஓரளவு தாக்குபிடித்து அரைசதம் கடந்தார். 68. 4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் 204 ரன்களுக்குள் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 


தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக பாவுமா 65 ரன்களும், வெர்ரின்னே 33 ரன்களும் எடுத்திருந்தனர். 


ஆஸ்திரேலியா அணி சார்பில் நாதன் லயன் 3 விக்கெட்களும், ஸ்காட் போலந்து 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.