இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவர் உலகக் கோப்பைக்குப் பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் களமிறங்கவில்லை. இந்நிலையில் இன்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்சூரியனில் அமைந்துள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில்  முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது. 


அதன்படி இந்திய அணியின் இன்னிங்ஸினை கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணி சிறப்பான மற்றும் வலுவான தொடக்கத்தினை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 5 ரன்களுக்கு இழந்தார். ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசா ரபாடா வீசிய பந்தினை ஸ்கொயெர் லெக் திசையில் தூக்கிய அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா போட்டியின் தொடக்கத்திலேயெ தனது விக்கெட்டினை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. 


அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளரான ககிசா ரபாடாவினை எதிர்கொள்ள தொடர்ந்து தடுமாறி வருகின்றார். ககிசா ரபாடா ரோகித் சர்மாவுக்கு எதிராக  அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து, 28 போட்டிகளில் பந்து வீசி அதில் 13 முறை விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மாவின் விக்கெட்டினை அதிகமுறை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்றால் அது, ககிசா ரபாடாதான். டெஸ்ட் கிரிக்கெட்டினைப் பொறுத்தவரையில் ககிசா ரபாடாவிடம் ரோகித் சர்மா 7 போட்டிகளில் 6 முறை தனது விக்கெட்டினை இழந்துள்ளார். 






ககிசா ரபாடாவுக்கு அடுத்து, இந்த இடத்தில் அதாவது ரோகித் சர்மாவின் விக்கெட்டினை சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை  கைப்பற்றிய வீரர் என்றால் அது, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி. இவர் ரோகித் சர்மாவின் விக்கெட்டினை 32 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 12 முறை கைப்பற்றி அசத்தியுள்ளார். 


சர்வதேச கிரிக்கெட்டில் எப்பேர்பட்ட பந்து வீச்சாளரையும் சின்னாபின்னமாக சிதறடிக்கும் வல்லமை படத்தை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரிடம் அதிகமுறை தனது விக்கெட்டினை இழந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் உண்மையாக உள்ளது.