தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் முக்கியமான வீரரான ககிசா ரபாடா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சாதனையை இவர் இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச டெஸ்ட்டில் படைத்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் ககிசா ரபாடா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இதுவரை (அதாவது இந்தியா 59 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் சேர்த்ததுவரை) ரபடா 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் ஐயர், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷ்ர்துல் தகூர் என 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்த முக்கிய காரணமாக இருந்தார்.
ரபாடாவைப் பொறுத்தவரையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 61 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 56 டி20 போட்டிகள் என மொத்தம் 228 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். இந்த 228 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். மேலும் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஏழாவது தென்னாப்பிரிக்கா வீரர் ஆவார்.
ஷால் பொல்லாக் (823), டேல் ஸ்டெயின் (697), மக்காயா எண்டினி (661), ஆலன் டொனால்ட் (602), ஜாக் காலிஸ் (572), மற்றும் மோர்னே மோர்கெல் (535) ஆகியோர் 500 விக்கெட்டுகளை சர்வதேச போட்டிகளில் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர்களாவர். இவர்களுக்கு அடுத்து இந்த வரிசையில் ரபாடா இணைந்துள்ளார். ரபாடா டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 5 விக்கெட்டுகளை 14 முறையும், 10 விக்கெட்டுகளை 4 முறையும் வீழ்த்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டுமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ரோகித் சர்மாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ரபாடா
இன்று அதாவது டிசம்பர் 26ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் உள்ள சென்சூரியனில் அமைந்துள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி இந்திய அணியின் இன்னிங்ஸினை கேப்டன் ரோகித் சர்மாவும் இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் தொடங்கினர். இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணி சிறப்பான மற்றும் வலுவான தொடக்கத்தினை ஏற்படுத்திக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 5 ரன்களுக்கு இழந்தார். ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசா ரபாடா வீசிய பந்தினை ஸ்கொயெர் லெக் திசையில் தூக்கிய அடிக்க முயற்சி செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா போட்டியின் தொடக்கத்திலேயெ தனது விக்கெட்டினை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தக்காரரான ரோகித் சர்மா தென்னாப்பிரிக்கா அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளரான ககிசா ரபாடாவினை எதிர்கொள்ள தொடர்ந்து தடுமாறி வருகின்றார். ககிசா ரபாடா ரோகித் சர்மாவுக்கு எதிராக அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து, 28 போட்டிகளில் பந்து வீசி அதில் 13 முறை விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். சர்வதேச போட்டிகளில் ரோகித் சர்மாவின் விக்கெட்டினை அதிகமுறை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்றால் அது, ககிசா ரபாடாதான். டெஸ்ட் கிரிக்கெட்டினைப் பொறுத்தவரையில் ககிசா ரபாடாவிடம் ரோகித் சர்மா 7 போட்டிகளில் 6 முறை தனது விக்கெட்டினை இழந்துள்ளார்.