ஐபிஎல் மெகா ஏலம்:


ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான விதிகள் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. இதனால் மெகா ஏலத்தில் என்ன மாதிரியான விதிகள் கொண்டு வரப்படும், வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் விலகினால் தடை செய்யப்படுவதற்கான விதிகள் கொண்டு வரப்படுமா என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளது.


முக்கியமாக ஆர்டிஎம் மற்றும் இம்பேக்ட் பிளேயர் விதிகளில் என்ன மாதிரியான மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இச்சூழலில் தான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்கள் அணியின் புதிய ஆலோசகராக ஜாகீர் கானை நியமித்துள்ளது. அதே நேரம் கேகேஆர் அணியின் பயிற்சியாளரக பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே அந்த அணியை ஐபிஎல் சாம்பியனாக்கிய கம்பீர் அதற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தான் ஆலோசகராக செயல்பட்டார்.


கவுதம் கம்பீரின் அணிதான்:


இந்நிலையில் தான் எங்கள் அணியே கவுதம் கம்பீரின் அணிதான் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"எங்கள் அணி இன்றைக்கு பலமான அணியாக இருப்பதற்கு காரணம் கம்பீர் தான்.


மெகா ஏலம் நடைபெற்ற போது எப்படி செயல்பட வேண்டும் என்று அவர் தான் எங்களுக்கு ஆலோசனை வழங்கினார். அந்த வகையில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு அவர் தான் காரணம். அதுமட்டுமல்லாமல் மெகா ஏலத்திற்கு 2 வாரங்களுக்கு முன்பாக தான் லக்னோ அணி எங்களுக்கானது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது எங்களிடம் அனலிஸ்ட், ஆய்வு குழு என்று யாருமே இல்லை. அதனால் லக்னோ அணியை முழுக்க முழுக்க உருவாக்கியது கவுதம் கம்பீர் தான்.


அவரால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, சரியான பேலன்ஸ் கொண்ட அணியை உருவாக்கி காட்டினார். லக்னோ அணியில் இருந்த ஒவ்வொரு வீரருக்கும், நிர்வாகிக்கும் ஒரு ரோல் உள்ளது. கவுதம் கம்பீர் அவரின் பணிகளை மிகச்சிறப்பாக செய்து முடித்தார்"என்று கூறியுள்ளார்.