இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே வருகின்ற 1 ம் தேதி முதல் இலங்கை அணிகளின் ஆலோசகர் பயிற்சியாளராக இருப்பார் என்றும், இலங்கை கிரிக்கெட்டின் (SLC) நிர்வாகக் குழு, வாரியத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, ஜெயவர்த்தனே சமீபத்திய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஒரு வருட காலத்திற்குச் செயல்படும் அவரது புதிய பொறுப்பில், ஜெயவர்த்தனே தேசிய அணிகளின் ஒட்டுமொத்த கிரிக்கெட் விஷயங்களுக்கு பொறுப்பாக இருப்பார். மேலும், அணியில் உள்ள வீரர்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களுக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ ஆஷ்லி டி சில்வா தெரிவிக்கையில், வருகின்ற 2022 ஆம் ஆண்டு இலங்கை அணி கடுமையான தொடர்களை சந்திக்கும் சூழலில், மகிளா இலங்கை அணியுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மகிளா ஜெயவர்த்தனே பேசுகையில், இலங்கை தேசிய கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற இது ஒரு உற்சாகமான வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கை அணியை தொடர்ந்து U19 மற்றும் A அணிகள் உட்பட, இலங்கையில் உள்ள மகத்தான கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர முயற்சிப்பேன்.
வருகின்ற காலகட்டத்தில் எங்கள் தேசிய பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களின் குழுவை ஆதரிப்பதே எனது முக்கிய பங்காக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஜெயவர்த்தனே கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் விளையாடிய டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்றுக்கான ஆலோசகராக செயல்பட்டார். அதேபோல், இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு கரீபியனில் நடைபெற உள்ள அண்டர் 19 உலகக் கோப்பை இலங்கை அணிக்கு ஆலோசகர் மற்றும் வழிகாட்டியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்