2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான கவுண்ட்டவுன் ஆல்ரெடி தொடங்கிவிட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியானது தொடங்க சரியாக 16 நாட்களே உள்ள நிலையில், வருகின்ற அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 


இந்திய அணி வருகின்ற அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


இந்தநிலையில், உலகக் கோப்பையை முன்னிட்டு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக பிசிசிஐ நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற நபர்களுக்கு இந்த விரும்பத்தக்க கோல்டன் டிக்கெட்டை வழங்கி கெளரவித்து வருகிறது.  இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து 2023 உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இதன்மூலம், இந்தியா முழுவதும் உள்ள எந்த மைதானத்திலும் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை ரஜினிகாந்த் இலவசமாக காணலாம். மேலும், விவிஐபி இடத்தில் சிறப்பு விருந்தினராக அமர வைக்கப்படுவார். 






இந்த சிறப்பான செய்தியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த பதிவில், “பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட்டை வழங்கி கௌரவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது தனிப்பட்ட ஸ்டைலாலும், கலாச்சாரத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் அழியாத முத்திரையை பதித்தவர். தலைவர் உலகக் கோப்பை நேரில் கண்டு சிறப்பு செய்வார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் புகழ்பெற்ற விருந்தினராக அவர் இருப்பதன் மூலம் மிகப்பெரிய கிரிக்கெட் காட்சியை ஒளிரச் செய்வார்.” என பதிவிடப்பட்டு இருந்தது. 


முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு பிசிசிஐ ’கோல்டன் டிக்கெட்’ வழங்கி கௌரவம் செய்தது. உலக கிரிக்கெட்டே ஜாம்பவானாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும் ’கோல்டன் டிக்கெட்’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ இந்த சிறப்பு டிக்கெட்டை மேலும் பல பிரபலங்களுக்கு பரிசாக வழங்கலாம். மகேந்திர சிங் தோனிக்கு கோல்டன் டிக்கெட் வழங்குமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தோனிக்கு கோல்டன் டிக்கெட் கொடுப்பது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. 


2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பின்வருமாறு:


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்