கடந்த ஆகஸ்ட் மாதம் முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறிய பும்ரா, பலமுறை திரும்ப முயற்சித்தும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. கடந்தாண்டு செப்டம்பர் 12ம் தேதி இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் பும்ரா இடம்பிடித்த நிலையில், ஆரம்பத்தில் காயம் பெரிதாகத் தெரியவில்லை. 


தொடர் காயத்தில் பும்ரா:


கடந்தாண்டு, செப்டம்பர் 23 மற்றும் 25ஆம் தேதிகளில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு டி20 போட்டிகளில் பும்ரா விளையாடினார். இருப்பினும், அதற்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, திருவனந்தபுரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பும்ரா விளையாடவில்லை.


அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் முதுகில் அதிக அழுத்தம் காரணமாக காயம் இருப்பது தெரியவந்தது. அடுத்த நாள், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பும்ரா. அங்கு, பும்ராவின் காயம் தீவிரமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர், அவர் T20 உலகக் கோப்பையில் இருந்து விலகினார்.


 நீண்ட இடைவெளி:


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறியதில் இருந்து எந்த போட்டியிலும் பும்ரா விளையாடவில்லை. அவர் இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு எதிரான சொந்த தொடரில் மீண்டும் திரும்புவார் என்று கூறப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை பின்தங்கிய நிலையில் இருந்ததால் அப்போதும் அது நடக்கவில்லை. 


ஆனால், பும்ரா நவம்பரில் மீண்டும் களத்திற்கு வந்தார். டிசம்பர் நடுப்பகுதியில் பந்து வீசத் தொடங்கினார். அவரது உடலில் முன்னேற்றம் தெரிந்ததால், இலங்கைக்கு எதிரான ஒயிட்-பால் தொடருக்கு தேர்வாளர்கள் அவரை தாமதமாகச் சேர்த்தனர்.


ஆனாலும், அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமானது. பும்ரா என்சிஏவில் மேட்ச்-சிமுலேஷன் பயிற்சிகளை செய்திருந்தாலும், ஜனவரி தொடக்கத்தில் மும்பையில் நடந்த உடற்பயிற்சி பயிற்சியின் போது அதிக பணிச்சுமைகளைச் செய்யும்போது அவர் அசௌகரியத்தை உணர்ந்தார். அப்போது செய்யப்பட்ட ஸ்கேன் ஒரு புதிய சிக்கலை வெளிப்படுத்தியது, இதன் காரணமாக இறுதியில் அவரை ஆஸ்திரேலியா டெஸ்டில் இருந்து விலகினார்.


இதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் இருந்தும் அவர் விலகியது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. இதற்கு மத்தியில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியான வண்ணம் உள்ளது.


மகிழ்ச்சி செய்தி:


இந்நிலையில், பும்ரா குறித்த மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பின் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் பும்ரா மீண்டும் பயற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பான செய்தியை பிடிஐ வெளியிட்டதை அடுத்து, பும்ராவின் உடல்நிலை குறித்து தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.


இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "பும்ரா நியூசிலாந்தில் அவரது முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது வெற்றிகரமாக முடிந்தது. அவர், தற்போது வலியின்றி இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு தனது பயிற்சித் தொடங்க நிபுணர்களால் அறிவுறுத்தப்பட்டார். அதன்படி, பும்ரா வெள்ளிக்கிழமை முதல் பெங்களூரில் உள்ள என்சிஏவில் தனது மீண்டும் பயற்சியை தொடங்கினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல, கீழ் முதுகில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு அடுத்த வாரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.