Jasprit Bumrah: இந்திய கிரிக்கெட் அணி மிகவும் ஆவலாக காத்திருக்கும் விஷயம் என்றால் அது இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளார் பும்ராவின் கம்பேக் தான். அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்டத் தொடரில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள பும்ரா, இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.


இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனிச்சாதனையை படைக்கவுள்ளார். அதாவது இந்த தொடரில் கேப்டனாக செயல்படவுள்ளதால் இந்திய அணியை டி20 போட்டி வகைகளில் வழிநடத்தும் 11வது வீரராவார். அதேபோல், இந்திய அணியை டி20 போட்டியில் வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் தனதாக்குகிறார். 


கேப்டன்கள்:


இதற்கு முன்னர் இந்திய அணியை 10 பேர் டி20 வகைக் கிரிக்கெட்டில் வழிநடத்தியுள்ளனர். அதாவது டி20 வகைக் கிரிகெட் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இந்திய அணியை முதன் முதலில் வழிநடத்தியவர் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக். அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்திய அணியின் டி20 கேப்டனாக தோனி இருந்தார். மேலும் அந்த காலட்டத்தில் இந்திய அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டார். 


தோனி இல்லாத நேரங்களில் சுரேஷ் ரெய்னா மற்றும் ரஹானே இந்திய அணியை வழிநடத்தினர். அதன் பின்னர் 2017ஆம் ஆண்டு முதல் இந்திய அணியை கோலி வழிநடத்தினார். கோலி இல்லாத நேரங்களில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் வழிநடத்தினர். அதேபோல் 2022இல் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்க்கு இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களுக்குப் பின்னர் தற்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். 


பும்ராவிற்கு தனி பெருமை:


ஹர்திக் பாண்டியாவைத் தவிர இதற்கு முன்னர் இந்திய அணியை வழிநடத்தியவர்கள் அனைவரும் அதிரடி பேட்ஸ்மேன்களாக இருந்தவர்கள். இதில் ஹர்திக் பாண்டியா மட்டும் ஆல்-ரவுண்டர் வரிசையில் உள்ளார். இதையடுத்து இந்திய அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இதன் மூலம் இந்திய அணியை கபில் தேவ்க்குப் பின்னர் வழிநடத்தும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளாராகவுள்ளார். அதேபோல், டி20 வகையில் இந்திய அணியை வழிநடத்தும் முதல் வேகப்பந்து வீச்சாளாராகவுள்ளார் பும்ரா.  11 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்குள் வரும் பும்ரா தனிச் சாதனையுடன் வந்துள்ளார். 


இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் செயல்படுகிறார். மேலும் இந்த தொடரில் ரிங்கு சிங் சர்வதேச அளவில் அறிமுகமாகிறார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்த சஞ்சு சாம்சனும் இந்த தொடரிலும் நீடிக்கிறார்.