நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பது, ஐபிஎல் தொடரில் அவரை ஏலத்தில் எடுத்துள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


ஜேமிசன் காயம்:


கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரின் போது, கைல் ஜேமிசனுக்கு முதுகுப்பகுதியில் அழுத்த முறிவு ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், ஓய்வுக்குப் பிறகு அண்மையில் தொடங்கிய, இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் மீண்டும் களமிறங்கினார். ஆனால், பந்துவீச்சின் போது சிரமத்தை உணர்ந்த அவர் தொடரிலிருந்து விலகினார். தொடர்ந்து எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவில், முதுகுப்பகுதியில் அழுத்த முறிவுக்காக ஜேமிசனுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.


நியூசிலாந்து விளக்கம்:


”இது கைலுக்கு ஒரு சவாலான மற்றும் கடினமான நேரம். இது எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு . நியூசிலாந்து அணிக்காக விளையாடும்போது அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  அவர் மீண்டு வர நாங்கள் வாழ்த்துகிறோம். மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு பிறகு தான் அவரது உடற்தகுதி குறித்து தெரிய வரும். பல உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் முதுகில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள், அவர்கள் குணமடைவதற்கான நேரம் பல்வேறு  காலகட்டங்களில் மாறியுள்ளன. கைல் குணமடைவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஏனென்றால் அவர் எங்களுக்காக ஒரு நட்சத்திரமாக இருந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அறுவைசிகிச்சை விரைவாக விளையாடுவதற்கு உதவுகிறது, அது அவருக்கு ஊக்கமளிக்கும் விஷயம்” என நியூசிலாந்து அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டெஸ்ட் போட்டிகளில் அசத்தல்:

 27 வயதான 6.2 அடி உயர கைல் ஜேமிசன் நியூசிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். இதுவரை 16 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர், 72 விக்கெட்களை எடுத்து அசத்தியுள்ளார். இந்நிலையில் அவர் காயத்தால் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகியது, நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

சென்னை அணிக்கு பின்னடைவு:

 

இதனிடையே, காயத்தில் இருந்து மீண்டு வந்த கைல் ஜேமிசனை, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அவரது அடிப்படை ஏலத்தொகையான ஒரு கோடிக்கே சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அவர் நடப்பு தொடரில் சிஎஸ்கே அணிக்கான பந்துவீச்சில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதால், நடப்பு தொடரில் ஜேமிசன் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.  இதனால், சென்னை அணி விரைவில் ஜேமிசனுக்கான மாற்று வீரரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.