ஐபிஎல் தொடரில் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒரே கேப்டன் ரோகித் சர்மாதான் என்று முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கௌதம் காம்பீர் தெரிவித்தார்.


டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் மூன்றாவது நாளிலேயே ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இந்தநிலையில், நேற்றைய போட்டியின்போது முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் கௌதம் காம்பீர் வர்ணனையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஐபிஎல் தொடரில் தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்த ஒரே கேப்டன் ரோகித் சர்மாதான் என்று தெரிவித்தார். மற்றொரு வர்ணனையாளரான தீப் தாஸ் குப்தா வர்ணனையின்போது காம்பீரிடம் ஒரு கேள்வியை கேட்டார். அதில், “ ஐபிஎல் தொடரில் நம்பமுடியாத கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். தோனி இருந்து வருகின்றனர். இதில் யாராவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்று கேட்டார். 


அதற்கு பதிலளித்த காம்பீர், “ இது ஒரு கடினமான கேள்வி, ஆனால் இந்த கேள்விக்கு என்னிடம் பதில் உள்ளது. நான் இரண்டு கேப்டன்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால், நான் தேர்ந்தெடுக்கும் முதல் வீரராக ரோகித் சர்மாதான் இருப்பார். இரண்டாவது வீரர் யுவராஜ் சிங். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. இந்த இருவரைத் தவிர. ஐபிஎல் தொடரில் நாங்கள் இரண்டு கோப்பைக்கு மேல் வென்றிருப்போம் இந்த இரண்டு வீரர்கள் எங்கள் பக்கம் இருந்திருந்தால்.. 


ரோஹித்தும் நானும் ஓப்பன் செய்வோம், ராபின் உத்தப்பா 3 இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4 இடத்திலும், யுவராஜ் 5 இடத்திலும், யூசுப் பதான் 6 இடத்திலும், ஆண்ட்ரே ரசல் 7 இடத்திலும் இது மட்டும் நடந்திருந்தால் எப்படிப்பட்ட அணியாக இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். யுவராஜை எடுக்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். ஆனால் அது நடக்கவில்லை. 


ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி 4 முறையும் கோப்பைகளை வென்றுள்ளனர். ஆனால், எதிரணி கேப்டனாக தனக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்தது ரோகித் சர்மா மட்டும்தான். நான் வேறு யாருக்காகவும் அவ்வளவு திட்டங்கள் போடவில்லை.” என்று தெரிவித்தார். 


ஏழு ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடிய கம்பீர், 2012 மற்றும் 2014 இரண்டு கோப்பைகளை வென்றுள்ளார்.


ஐபிஎல் கோப்பை வரலாறு:


ஐபிஎல் தொடரனாது இதுவரை 15 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இதில் அதிகபட்மாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. 2013,2015,2017,2019,2020 ஆகிய சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் தலைமையில் கோப்பையை வென்றது. அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். 


இதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. நான்கு முறையும் கேப்டனாக தோனியே இருந்துள்ளார். இந்த அணி 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. 


இதற்கு அடுத்து, 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த இரு முறையும் கம்பீர் கொல்கத்தா அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.