அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த புகைப்படத்தை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு மிகவும் தேவை," என்று அந்த போட்டோவுடன் அவர் எழுதியுள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா அண்மையில் நடந்த அதாவது கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாக குஜராத் இருப்பதால் அங்கு நடைபெற்ற தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடியே, குஜராத் தேர்தலில் அசுர பலத்துடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஜம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட ரிவபா ஜடேஜா 84,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவர் பதிவான வாக்குகளில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஜடேஜா பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 10ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் சேர்த்தது.
அந்த இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி சார்பில் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் சதம் விளாசினர். கிரீன்க்கு இதுதான் முதல் டெஸ்ட் சதம் ஆகும். அதேபோல் இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுகள் (113) வீழ்த்தியவர் என்ற சாதனையையும் படைத்து இருந்தார். அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவும் அதிரடி காட்டியது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி சதம் விளாச, இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 571 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் அதிகம் எடுத்து இருந்தது.
அதன் பின்னர் தனது இரண்டவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் சேர்த்த நிலையில், இரு அணி கேப்டன்களும் போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள ஒத்துக் கொண்டதால், நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.