உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது.
ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய அயர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி டெக்டர் 45 ரன்கள் எடுத்தார். அடுத்தபடியாக ஸ்டிர்லிங் 34 ரன்களும் டாக்ரெல் 14 ரன்களும் எடுத்தனர்.
பலம் வாய்ந்த இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை பறிகொடுத்தது அயர்லாந்து. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக எம்.தீக்ஷனா, டபிள்யூ.ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பி.ஃபெர்னான்டோ, லஹிரு குமாரா, கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இவ்வாறாக அயர்லாந்து 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது. 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்த களம் கண்ட இலங்கை 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133
ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான
குசால் மென்டிஸ் 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் விளாசினார்.
தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா ஆகியோர் தலா 31 ரன்கள் எடுத்தனர். தனஞ்செய டி சில்வா டெலனி பந்துவீச்சில் டக்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குசால் மென்டிஸ், சரித் அசலங்கா ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். வரும் செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவுடன் இலங்கை அணி மோதவுள்ளது.
அயர்லாந்து அணி அடுத்து இங்கிலாந்து சந்திக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதனிடையே, இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 உலகக்கோப்பை லீக் சுற்றுக்கான போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கடும் எதிர்பார்ப்புக்கிடையில் இந்த போட்டிகள் மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளன.
வெற்றியை வெடி வெடித்துக் கொண்டாட பாகிஸ்தான் ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கும் இந்த போட்டி நடைபெற இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும். நேற்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி 90% மழையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது, மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் கூறியுள்ள செய்தி பலரை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது.
இரு அணிகளை பொறுத்தவரை பேட்டிங்கில் இருவருமே அசுர பலத்துடன் இருப்பதால் இன்று போட்டி முழுவதும் மழையென பெய்யும் பவுண்டரிகளை பார்க்கலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவை விட பாகிஸ்தானின் பவுலிங் லைன் அப் பல மடங்கு அச்சுறுத்தும் வகையில் இருக்கும்.