T20 world cup: இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்படும் சூழல் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.


T20 world cup: உலக கிரிக்கெட் ரசிகர்கள்  மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நாள் இன்று வந்துவிட்டது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.


கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தலைமையிலான அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், நேற்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி 90% மழையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. அந்நாட்டின் வானிலை தகவலின்படி, 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனால் போட்டி நடைபெறுமா? என்பது கேள்விக்குறி தான். அதே நேரத்தில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், அதற்கு ரிசர்வ் நாள் இல்லை. இதனால் இரு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.


இதுவரை உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியை சந்தித்தது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நிச்சயம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது, மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மெல்போர்ன் நகரில் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இரவில் மழை பெய்ய 30 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இருந்து வருகிறார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில், மிடில் ஆர்டர் வரிசையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா  எதிரணிக்கு அச்சுறுத்தல் தருகின்றனர். பும்ரா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவே என்றாலும், ஷமி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி நம்பிக்கை அளித்தார். புவனேஷ்வர் குமார், அஷ்வின், சாகல் ஆகியோரது அனுபவத்துடன், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் இளமை கைகொடுத்தால் இந்திய அணி நிச்சயம் இன்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெல்லும். 


பாகிஸ்தான் அணி மிக வலுவான அணியாகவே இருந்து வருகிறது. கேப்டன் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் சிறப்பான தொடக்கம் தந்து வருகின்றனர். அதிலும் ரிஸ்வானின் ஆட்டம் ஆபாரமானது, அபாயமானது. மிடில் ஆர்டர் வரிசையில் பாகிஸ்தான் அணியில் சிறிய சிக்கல் இருந்து வருகிறது. கடந்த சில தொடர்களாக யாரும் பெரிதாக நம்பிக்க அளிக்கவில்லை. 


வழக்கம்போல், பாகிஸ்தான் அணி பந்துவீச்சில் கெத்து என்பதை இன்றைய போட்டியில் மீண்டும் நிருபிக்கலாம். நசீம் ஷா, ஷகின் அப்ரிடி வேகம் இந்திய அணிக்கு சோகத்தை அளித்தாலும் பெரிய ஆச்சர்யம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் இன்றைய போட்டி இருநாட்டு ரசிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்து படைக்கும்.