இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் யாருக்கு வெற்றி காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், கேப்டன் பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. நேற்றுவரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி 90% மழையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்ய குறைவான வாய்ப்பே உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுவரை உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியே சந்திக்காத இந்திய அணி கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இன்றைய போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இரு அணிகளுக்குள்ளும் ஒரு போட்டி நிலவுகிறதோ இல்லையே இரு அணி வீரர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொருவரும் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல டி20 கேரியரில் மிகப்பெரிய சாதனைப் பட்டியலோடு காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முகம்மது ரிஸ்வான் ஆகியோரில் யார் ஸ்டார் ஆஃப் தி மேட்ச் ஆக இருப்பார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருவரின் பேட்டிங் புள்ளிவிவரங்களை நாம் காணலாம்.
சூர்யகுமார் யாதவ்
2021 ஆம் ஆண்டு டி20 போட்டியில் ஆடத் தொடங்கிய சூர்யகுமார் யாதவ் இதுவரை 34 போட்டிகளில் ஆடி 1045 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 38.7 சதவீதமாக உள்ள நிலையில் ஸ்ட்ரைக் ரேட் 176.8 ஆகும். 9 அரைசதங்களையும், ஒரு சதமும் அடித்துள்ள சூர்யகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 23 போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் 801 ரன்களை குவித்துள்ள அவர் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் சதத்தையும் எட்டினார். மேலும் 6 அரைசதங்களையும் விளாசிய சூர்யகுமாரின் ஸ்ட்ரைக் ரேட் 184.5 ஆக உள்ளது.
முகம்மது ரிஸ்வான்
சூர்யகுமாரை விட 7 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு முகம்மது ரிஸ்வான் டி20 போட்டிகளில் அறிமுகமான நிலையில் இதுவரை 73 போட்டிகளில் விளையாடி 2,460 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 52.34 சதவீதமாக உள்ள நிலையில் ஸ்ட்ரைக் ரேட் 128.05ஆகும். 22 அரைசதங்களும், ஒரு சதமும் அடித்துள்ள ரிஸ்வான் 2022 ஆம் ஆண்டில் 18 போட்டிகளில் ஆடி 821 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 அரைசதங்கள் அடங்கும். இந்த ஆண்டில் ரிஸ்வான் 126.3 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
இருவரையும் ஒப்பிடும் போது ரன்கள் மற்றும் மேட்ச் எண்ணிக்கை அடிப்படையில் ரிஸ்வான் முன்னிலையில் இருந்தாலும், அதற்கு சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் ரன்களை குவிக்கப்போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.