ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் பலர் அறிமுகம் அடைந்தனர். ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் வரிசையில் ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இர்ஃபான் பதான் மற்றும் ஜஸ்பிரீத் பும்ராவை போல் அறிமுகமாகினார். 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு இவர் நெட் பவுலராக சென்றார். அந்தத் தொடரில் வருண் சகர்வர்த்திக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவருக்கு அணியில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது. 


அந்த டி20 தொடரில் அவர் தன்னுடைய முதல் விக்கெட்டை வீழ்த்திய போது ரசிகர்கள் பலரும் தங்களுடைய மகிழ்ச்சியை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியிருந்தனர். சேலத்தின் சின்னப்பம்பட்டியிலிருந்து இந்திய அணிக்கு சென்று முதல் விக்கெட்டை வீழ்த்தி தன்னுடைய கனவை நிறைவேற்றி இருந்தார். அந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அந்தத் தொடரின் ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்று இருந்தார். இந்த விருதை ஹர்திக் பாண்ட்யா நடராஜனிடம் அளித்தார். அவரை பொருத்தவரை பந்துவீச கடினமான சூழல் இருந்தபோது அதில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் தான் நாயகன் என்று ஹர்திக் கூறினார்.






அந்தக் கடைசிப் போட்டிக்கு பிறகு சோனி சிக்ஸ் தொலைக்காட்சிக்கு நடராஜன் ஒரு பேட்டியை அளித்தார். அதில், “நான் ஒரு நெட் பவுலராக ஆஸ்திரேலியா வந்தேன். வருணுக்கு ஏற்பட்ட காயத்தின் மூலம் அணியில் இடம்பெற்றேன். நான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி வந்தேன். அதே ஃபார்மை ஆஸ்திரேலியாவிலும் தொடர நினைத்தேன்.


என்னுடைய முக்கிய பந்துகளான யார்க்கர் மற்றும் கட்டர் ஆகியவற்றை சிறப்பாக இங்கும் பயன்படுத்தினேன். முதல் தொடரில் நான் சிறப்பாக விளையாடியது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. என் மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பது தெரியாத அளவிற்கு உள்ளேன். மேலும் நான் விக்கெட் எடுத்தாலே ரன்கள் அதிகமாக கொடுத்தாலே ஒரே மாதிரியாக தான் இருப்பேன். இது நான் பல நாட்களாக பழகிய ஒன்று. என்னிடம் இதுகுறித்து பலர் கேட்டுள்ளனர். நான் எப்போதும் இருப்பது போல் தான் இங்கு இருந்தேன்” எனக் கூறியிருந்தார்.






அதன்பின்பு ஆஸ்திரேலிய தொடரின் கடைசி ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆஸ்திரேலிய தொடருக்கு பின்பு இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2021 ஐபிஎல் தொடரிலும் இவர் பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடராஜன் களமிறங்குகிறார். அவர் ஐபிஎல் தொடரில் தன்னுடைய முழு ஃபார்மை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்ப்போம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம்முடைய தமிழ்நாட்டு வீரருக்கு இந்தாண்டு சிறப்பாக அமையும் என்று கருதுவோம். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண