ஐபிஎல் தொடரினால் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்தவர்களும் தனது திறமையை கிரிக்கெட் உலகில் வெளிப்படுத்தியவர்களும் அதிகம். ஐபிஎல் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட வீரர்களை பட்டியலிட்டால் அதில் தற்போதைய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பெயர் கட்டாயம் இடம் பெறும். 


கால்பந்து vs கிரிக்கெட்


கேரளா போன்ற கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட இளைஞர்களைக் கொண்ட மாநிலத்தில் இருந்து கிரிக்கெட் மீது கவனம் செலுத்தியது மட்டும் இல்லாமல், சிறப்பாக அதற்காக தன்னை அற்பணித்து தற்போது உலகின் தலைசிறந்த லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற ஒரு அணியின் கேப்டனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது மட்டும் இல்லாமல் அணியை சிறப்பாகவும் வழிநடத்தி வருகின்றார் சஞ்சு சாம்சன். 


நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி அதில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றும், 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும், மொத்தம் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் சஞ்சு சாம்சன் குறித்து இருந்த பொதுவான விமர்சனம் என்னவென்றால், “ சஞ்சு சாம்சன் ஒட்டுமொத்த சீசனில் ஏதாவது ஒரிரு போட்டிகளில் மட்டும் சிறப்பாக விளையாடுவார், மற்றபோட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தினை வெளிப்படுத்தமாட்டார்” என்பதுதான்.  ஆனால் நடப்பு சீசனில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் திரைப்பட வசனத்தைப் போல், வேறலெவலில் உள்ளது. ஒரு போட்டியில் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, மூன்றாவது நடுவரின் தவறான முடிவினால் வெளியேற்றப்பட்டார். 






சஞ்சு சாம்சன் ஒரு கேப்டனாக அணியை சிறப்பாகவே வழிநடத்தி வருகின்றார். அணியில் இருக்கும் வீரர்கள் மீது அவர் வைக்கும் நம்பிக்கை வீரர்களின் ஆட்டத்தினைப் பார்க்கும்போது ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிகின்றது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லருக்கே சஞ்சு சாம்சன் தான் கேப்டன் என்றால், சஞ்சு சாம்சன் பட்லர் போன்ற வீரரைக் கையாள எதுமாதிரியான கேம் ப்ளானுடன் களமிறங்கவேண்டும் என்று யோசித்துப் பார்க்கவேண்டியுள்ளது. 


அன்பு மழையில் சஞ்சு


ராஜஸ்தான் அணி ரசிகர்கள் சஞ்சு சாம்சன் மீது அபரிமிதமான அன்பைப் பொழிந்து வருகின்றார்கள் என்றால், சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலமான கேரளத்தில் சாம்சன் மீது அன்பு மழையைப் பொழிந்து வருகின்றனர். கேரளாவை ஐபிஎல் தொடரில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாக எதுவும் இல்லாததால் கேரளாவில் உள்ள பெரும்பால கிரிக்கெட் ரசிகர்கள் சஞ்சு சாம்சன் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில், கேரளாவில் சஞ்சு சாம்சனின் தீவிரமான ரசிகரும் ஓவியருமான சுஜித், தனது வீட்டு மொட்டை மாடியில் சஞ்சு சாம்சனின் படத்தை பெரிதாக வரைந்துள்ளார். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்கள் தங்களது அபிமான விரர்களின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது.