ஐ.பி.எல். தொடரில் அறிமுக வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரிலும் இளம் வீரர்கள் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளம் ஆல்ரவுண்டர் ராமன்தீப்:
இந்த தொடரில் 26 வயதே ஆன ஆல் ரவுண்டரான ரமன்தீப் கொல்கத்தா அணிக்காக தேர்வாகியுள்ளார். இதுதொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது,“ ஏலம் நடைபெற்றுக் கொண்டிருந்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனது பெயர் ஏலத்திற்காக வந்தபோது நான் தொலைக்காட்சியை ஆஃப் செய்து விட்டேன். பின்னர், சிறிது நேரத்தில் எனக்கு அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் எனது குடும்பத்திடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்து வந்தது. அப்போதுதான் நான் கொல்கத்தா அணிக்காக தேர்வாகியது தெரிய வந்தது.
கே.கே.ஆர். என்னை வாங்குவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அதேபோல நடந்தது. அவர்களைப் பற்றி நான் நிறைய கேள்விபட்டிருக்கிறேன். அவர்கள் ஒரு சிறந்த அணி என்றும், வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் என்றும், வீரர்களின் திறமையை வளர்ப்பவர்கள் என்றும், தரமான பயிற்சியை அளிப்பவர்கள் என்றும் கேள்விபட்டிருக்கிறேன். இதனால், கொல்கத்தா அணிக்காக தேர்வாகியிருப்பதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
ரஸல் போல ஆடுவேன்:
நான் ஆரம்பத்தில் இருந்தே ரஸலைப் பின்தொடர்ந்து வருகிறேன். அவர் எப்படி டி20யில் பேட்டிங் மற்றும் பவுலிங் தாக்கத்தை உருவாக்குகிறார் என்பதை பார்த்திருக்கிறேன். நான் பேட்டிங் செய்யும்போது எல்லாம் இந்த சூழலில் ரஸல் என்ன செய்வார் என்று யோசித்து அதுபோல செயல்படவே முயற்சிக்கிறேன். பவுலிங்கிலும் ரஸல் மிகவும் கடினமான ஓவர்களை வீசுவார். கொல்கத்தா அணிக்காக ரஸல் பல போட்டிகளை வென்றுள்ளார். ஆண்ட்ரூ ரஸலைப் போலவே என்னாலும் கொல்கத்தா அணிக்காக பல போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரமன்தீப்சிங் 3 முதல்தர கிரிக்கெட்டில் ஆடி 124 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 69 ரன்களை எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 23 போட்டிகளில் ஆடி 397 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 80 ரன்களை எடுத்துள்ளார். 38 டி20 போட்டிகளில் ஆடி 325 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 54 ரன்களை எடுத்துள்ளார். மித வேகப்பந்து வீச்சாளரான ராமன்தீப்சிங் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளையும், டி20யில் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு மும்பை அணிக்காக ரமன்தீப்சிங் ஆடினார். அவர் அந்த சீசனில் 45 ரன்களும் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 20 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், டெல்லிக்கு எதிராக 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டத்தை மாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rishabh Pant: "கிரிக்கெட்டில் மீண்டும் அறிமுகமாவதுபோல உணர்கிறேன்" : ரிஷப்பண்ட் நெகிழ்ச்சி!
மேலும் படிக்க: CSK IPL 2024: தோனி குட்பாய் சொன்னால் அடுத்த கேப்டன் யார்? சிஎஸ்கே அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் விளக்கம்