விராட் கோலி என்ற ஒரு பெயரை கிரிக்கெட் உலகமே சொல்லும் யார் இவர் என்று.. விராட் கோலி இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளார். மேலும், விராட் கோலி இந்திய அணிக்கு அனைத்து வடிவங்களிலும் தகுதியானவர். டி20 உலகக் கோப்பை 2022 அல்லது ஒருநாள் உலகக் கோப்பை 2023 எதுவாக இருந்தாலும், இந்திய அணிக்காக ரன் மழையை பொழிந்தார் விராட் கோலி.


இப்படி பல முக்கிய போட்டிகளின் வெற்றிகளுக்கு விராட் கோலி சிறப்பாக செயல்பட்டாலும், 2024 டி20 உலகக் கோப்பைக்கான அவரது இடம் இன்னும் கேள்விகுறியாகவே உள்ளது. மேலும், ஒரு சில செய்தி நிறுவனங்கள் விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதைகேட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


விலக்கப்படுவதற்கு என்ன காரணம்..? 


வெளியான தகவலின்படி, டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸின் மெதுவான ஆடுகளம் விராட் கோலிக்கு செட் ஆகாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நம்புவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. 


இது தவிர, டி20 போட்டிக்கு ஏற்றவாறு ரன்களை குவிக்க விராட் கோலியின் அணுகுமுறையை மாற்றுவது குறித்து தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகதான் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்து சொற்ப ரன்களில் வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. 


அதே நேரத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ராஜ்கோட் டெஸ்டில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ரோஹித் சர்மாவை கேப்டனாக அறிவித்தார். மேலும், இந்த முறை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என தெரிவித்தார். ஆனால், விராட் கோலி குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இப்போது ஐபிஎல் மூலம் டி20 உலகக் கோப்பைக்கு வருவதற்கு கோலிக்கு ஒரே வழி உள்ளது. வருகின்ற ஐபிஎல் 2024 சீசன் 17ல் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது. 


இருப்பினும் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், திலக் வர்மா, ஷிவம் துபே போன்ற வீரர்கள்தான் தற்போதைய இந்திய அணிக்கு பொருத்தமானவர்கள் என்று நம்பப்படுகிறது. இதையடுத்து, வருகின்ற ஜூன் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் கோலி இடம் பெறுவாரா இல்லையா என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். 


விராட் கோலி டி20 வடிவத்தில் எப்படி..? 


விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஐபிஎல் 2024 முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். அவருக்கு முன், டி20 கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த இந்தியரால் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்:


விராட் கோலி இதுவரை 376 டி20 போட்டிகளில் 8 சதங்கள் மற்றும் 91 அரைசதங்கள் உட்பட 11994 ரன்கள் எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியல்: 



  1. கிறிஸ் கெய்ல்- 14562 ரன்கள்

  2. சோயப் மாலிக்- 13338 ரன்கள்

  3. கீரன் பொல்லார்ட்- 12899 ரன்கள்

  4. அலெக்ஸ் ஹேல்ஸ்- 12295 ரன்கள்

  5. டேவிட் வார்னர்- 12065 ரன்கள்

  6. விராட் கோலி- 11994 ரன்கள்