2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இம்முறை ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக உள்ளது. அதற்கு முன்பாக அடுத்த மாதம் வீரர்கள் மெகா ஏலம் நடைபெற உள்ளது. வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக 10 ஐபிஎல் அணிகளும் தங்களுடைய அணியில் சில வீரர்களை தக்கவைத்துள்ளனர். 


இதன்காரணமாக ஐபிஎல் ஏலத்தில் யார் யார் எந்த அணியில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்சல் பட்டேல் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். அவருடைய தலைமையின் கீழ் சென்னை அணியில் ஆட வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய விருப்பம்” எனக் கூறியுள்ளார். 


கடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஹர்சல் பட்டேல் விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் 32 விக்கெட் வீழ்த்தினார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்களையும் இவர் வீழ்த்தினார். 2021ஆம் ஆண்டு இவரை பெங்களூரு அணி 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது. இவரை அந்த அணி இம்முறை தக்கவைக்கவில்லை. இதனால் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் இவருக்கு அதிக மவுசு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இவருடைய ஆரம்ப விலை 2 கோடி ரூபாயாக உள்ளது. இவரை பெற பல அணிகள் முயற்சி செய்யும் என்பதால் இவருக்கு இம்முறை 10-15 கோடி வரை சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 63 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்சல் பட்டேல் 78 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 






முன்னதாக ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கு இம்முறை 1214 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது. அதில் கிறிஸ் கெயில், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. அதில் 896 இந்திய வீரர்களும், 318 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது. இதில் 61 பேர் இந்திய அணிக்காக விளையாடியுள்ள வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: “தோனியைப் போல ஒருவரைப் பார்த்தது இல்லை; அவர் போன் நெம்பர் கூட என்னிடம் இல்லை” - ரவி சாஸ்திரி