இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயத்தில் இருந்து குணம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் அணியில் இடம்பிடித்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் பும்ரா ஆகிய இருவருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “விராட் கோலி ஒரு சிறப்பான கேப்டன். அவர் எப்போதும் பந்துவீச்சாளர்களின் கேப்டன். களத்தில் பந்துவீச்சாளர்களிடம் ஆலோசனை கேட்டு கொண்டு இருப்பார். எங்களை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் பந்துவீச அனுமதிப்பார். அவர் அணிக்கு ஒரு புதிய சக்தியை எப்போதும் கொண்டு வருவார். அவருடைய கேப்டன்சி சிறப்பாக அமைந்தது. 


இவர் நீண்ட நாட்களாக சதம் அடிக்கவில்லை என்று விமர்சனம் செய்து தவறு. ஏனென்றால் ஒரு சிறப்பான வீரர் எப்போதும் சதம் அடிக்க தேவையில்லை. அவர் இந்திய அணிக்காக தொடர்ந்து அரைசதங்களை அடித்து வருகிறார். அவர் அடிக்கும் 60, 70 ரன்களுக்கும் அணிக்கு மிகவும் முக்கியமானவை தான். ஆகவே சதம் அடிக்கவில்லை என்று குறை கூறுவது என்னைப் பொறுத்தவரை மிகவும் தவறு. இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக யார் வேண்டுமானாலும் வரலாம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் யாருக்கு தான் அணியை வழி நடத்த வேண்டும் என்ற ஆசை இருக்காது” எனக் கூறியுள்ளார். 




இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு அடுத்து யார் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருப்பார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கும் கேப்டனாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்திய அணியின் ரன் மெஷினாக கருதப்படும் விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.  அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். 


மேலும் படிக்க: “தோனியைப் போல ஒருவரைப் பார்த்தது இல்லை; அவர் போன் நெம்பர் கூட என்னிடம் இல்லை” - ரவி சாஸ்திரி