இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி தன்னுடைய பதவிக்காலத்தை டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு செய்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. எனினும் கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் தன்னுடைய நான்கு ஆண்டுகால இந்திய பயிற்சியாளர் பணியை ரவி சாஸ்திரி நிறைவு செய்தார்.
2016-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2017-ம் ஆண்டு கும்ப்ளே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பின் இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை மீண்டும் நியமிக்க வேண்டும் என்று பலரும் கருதினர். அந்த சமயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கபட்டார். 2017ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகும் ரவி சாஸ்திரி இந்திய பயிற்சியாளர் பதவியை தொடங்கினார்.
ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, எம்.எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் இந்திய அணியை வழிநடத்திச் சென்றுள்ளனர். ஓய்வுக்கு பிறகு தனது அனுபவங்களையும், கருத்துகளையும் அவ்வப்போது பகிர்ந்து வரும் ரவி சாஸ்திரி, இந்திய அணி கேப்டன்கள் குறித்து ஒரு நேர்காணலில் பேசி இருக்கிறார்.
அதில், ”விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமானவர். களத்தில் இறங்கிவிட்டால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் போட்டியை வெல்வதில் மட்டும் கவனம் செலுத்துவார். ஆனால், மைதானத்திற்கு வெளியே மிகவும் அமைதியான, ஜாலியான ஒருவராக இருப்பார். ரோஹித் ஷர்மா ஓரளவு எம்.எஸ் தோனியைப் போல, அவரை பின்பற்றியவர். ஆனால், தோனி தனித்துவமானவர். நிறைய வீரர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால், தோனியைப் போல ஒருவரைப் பார்த்தது இல்லை. சச்சின் கூட ஒரு சில முறை கோபமுற்று பார்த்திருக்கிறேன். ஆனால், தோனி அப்படி இருந்ததே இல்லை. இன்று வரை, தோனியின் ஃபோன் நம்பர் என்னிடம் இல்லை. நான் கேட்டதும் இல்லை. அவர் செல்போனை கையில் வைத்து கொண்டு சுற்ற மாட்டார் என்பது எனக்கு தெரியும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்