இந்திய கிரிக்கெட் அணியில் 2021ஆம் ஆண்டு இடம்பிடித்து கலக்கியவர் நடராஜன். குறிப்பாக 2020-21 ஆஸ்திரேலிய தொடரில் இவருடைய பங்களிப்பு சிறப்பாக அமைந்தது. 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இவர் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு முழங்கால் காயம் காரணமாக 2021 ஆண்டு முழுவதும் அவதிப்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். 


இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இவர் இடம்பெற்றுள்ளார். தற்போது நல்ல உடற்தகுதி பெற்று வரும் நடராஜன் மீண்டும் களத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார். இது தொடர்பாக அவர் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். 


அதில், “ஐபிஎல் ஏலம் தொடர்பாக நான் பெரிதும் எதுவும் எதிர்பார்க்கவில்லை. 2022ஆம் ஆண்டில் ஐபிஎல்,டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல முக்கியமான தொடர்கள் உள்ளன. ஆனால் நான் இவை எதிலும் கவனம் செலுத்தவில்லை. என்னுடைய முழு கவனமும் நன்றாக உடற்தகுதி பெற்று மீண்டும் பழைய நடராஜனாக வர வேண்டும் என்பதில் தான் உள்ளது. அதை சரியாக செய்தாலே மற்ற விஷயங்கள் தானாக நடைபெறும். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் திரும்ப உள்ளதால் எனக்கு பதட்டமாக உள்ளது. பதட்டமில்லை என்று கூற முடியாது. 




ஏனென்றால் நான் ஐபிஎல் தொடர் மற்றும் இந்திய அணிக்காக நன்றாக விளையாடியுள்ளேன். ஆகவே நான் திரும்பி வரும்போது ரசிகர்கள் என்னுடைய அந்த ஆட்டத்தை எதிர்பார்ப்பார்கள். நான் ஒரிரு போட்டிகளில் களமிறங்க தொடங்கினால் அது சரியாகிவிடும். மீண்டும் பழைய நடராஜனாக திரும்பி வரவேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக உள்ளது. கொரோனா காலத்தில் காயத்தில் இருந்து மீண்டு வருவது பெரிய சவாலாக அமைந்தது. எனினும் நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து கொண்டு தீவிரமாக பயிற்சி செய்து வருகிறேன். இந்த கால கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர், ஷ்யாம் பிரசாத் உள்ளிட்டவர்களுடன் மட்டும் பேசி வருகிறேன். வழக்கம் போல் என்னுடைய அண்ணா ஜெயப்பிரகாஷ் உடனும் பேசி வருகிறேன். அவர் எனக்கு ஊக்கமான வார்த்தைகளை கூறி வருகிறார். 


இந்த இடைவேளையின் மூலம் எனக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. அதாவது கிரிக்கெட் மற்றும் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து வரும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன்” எனக் கூறியுள்ளார். 2020 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பித்து யார்க்கர் பந்து வீசி நடராஜன் அசத்தினார். இம்முறை அவரை ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் எந்த அணி எடுக்கும் என்பதில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ரோஹித்தின் வெற்றியை கோலி விரும்பவில்லை என்பது முட்டாள்தனம்..! கடுப்பான கவாஸ்கர்..!