இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணி அகமாதாபாத்தில் நேற்று மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்தபோது அந்த அணியின் நிகோலஸ் பூரணுக்கு யுஸ்வேந்திர சாஹல் எல்.பி.டபுள்யூ முறையில் அப்பீல் செய்தார். ஆனால், கள நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். இதையடுத்து, டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்வதில் சற்று குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும். கோலி- ரோகித் கலந்து பேசி உடனடியாக டி.ஆர்.எஸ். அப்பீல் செய்தனர். பின்னர், டி.வி. ரீப்ளேயில் அவுட் என்று தெரிந்ததால் நிகோலஸ் பூரண் பெவிலியன் திரும்பினார்.
இந்த டி.ஆர்.எஸ். விவகாரத்தை வைத்து விராட்கோலி – ரோகித்சர்மா இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதுதொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது,
“ இப்போது அணியில் இருக்கும் முன்னாள் கேப்டன் புதிய கேப்டனின் வெற்றியை விரும்பமாட்டார் என்ற யூகங்கள் அடிக்கடி எழுகிறது. இது முட்டாள்தனம். ஏனெனில் அவர் ரன் எடுக்கவில்லை என்றால், ஒரு பந்துவீச்சாளர் விக்கெட் வீழ்த்தவில்லை என்றால் அவர் அணியில் இருந்து வெளியேறி விடுவார். அவர் ஏற்கனவே கேப்டன் பதவியை இழந்துவிட்டார். அல்லது பதவி விலகிவிட்டார். நீங்கள் பேட்டிங்கிலோ அல்லது பந்துவீச்சிலோ பங்களிக்காவிட்டால் அணியில் இருந்து வெளியேறப் போகிறீர்கள்.
இருவரும் பழகமாட்டார்களா? அவர்கள் இந்தியாவிற்காக விளையாடுகிறார்கள். எனவே, இந்த பேச்சுக்கள் அனைத்தும் கதைகளை உருவாக்குவதற்கும், முயற்சிப்பவர்களிடம் இருந்தும் வெறும் யூகங்கள் மட்டுமே. இரண்டு வீரர்கள் பற்றி நீங்கள் பொதுவாக கேட்கும், பேசும் பேச்சுக்கள் அனைத்தும் யூகங்கள். உண்மையிலே யாரும் அப்படி உங்களிடம் சொல்லவில்லை. இது ஒரு வருடமாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் இதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இந்த வகையான யூகங்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். ஏனென்றால், உண்மை என்னவென்று உங்களுக்கு தெரியும். “
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அணியின் கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பு வகித்தவர் விராட்கோலி. இவர் கடந்தாண்டு இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். பின்னர் அணி நிர்வாகம் அவரை ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக தொடர்ந்த கோலி கடந்த மாதம் தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு, தனது டெஸ்ட் கேப்டன்சியையும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக, அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் புதிய கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்