மும்பை வான்கடே மைதானத்தில் டாடா ஐ.பி.எல். நாளை தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றனர். ஒவ்வொரு ஐ.பி.எல், தொடரிலும் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்படும். ஆனால், இன்னும் சில ஐ.பி.எல்.களுக்கு முறியடிக்கப்படாத அளவிற்கு சில சாதனைகள் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. அவற்றில், கிறிஸ் கெயிலின் அசாத்திய சாதனைகளும் அடங்கும்.


ஐ.பி.எல். போட்டிகளிலே அணிகளை கடந்து ரசிகர்களை கொண்ட சில வீரர்களில் முதன்மையானவர் கிறிஸ் கெயில். மைதானத்தின் கூரையை விட்டு வெளியே செல்லும் அளவிற்கு சிக்ஸர் அடிக்கும் கெயில் யுனிவர்ஸ் பாஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். பெங்களூர் அணியின் தூணாக விளங்கி, எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கிறிஸ் கெயில்தான் ஐ.பி.எல். வரலாற்றிலே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.




மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த கிறிஸ் கெயில் இதுவரை 142 ஐ.பி.எல். போட்டிகளில் மட்டும் ஆடி 357 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதில், 2013ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக ஆடிய புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக மட்டும் ஒரே போட்டியில் 17 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையாளர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் கிறிஸ் கெயில்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளார், 5வது இடத்திலும் உள்ளார். பிரண்டன் மெக்கல்லமும் 13 சிக்ஸர்களுடனும் 2வது இடத்தில் உள்ளார். 4வது இடத்தில் டிவிலியர்ஸ் 12 சிக்ஸர்களுடன் உள்ளார்.


ஐ.பி.எல். போட்டிகளில் கம்பீரமாக 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கும் கிறிஸ் கெயிலுக்கும், இரண்டாவது இடத்தில் இருக்கும் டிவிலியர்சுக்கும் சுமார் 100 சிக்ஸர்கள் இடைவெளி உள்ளது. டிவிலியர்ஸ் 252 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 227 சிக்ஸர்களுடன் 3வது இடத்திலும், தோனி 219 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.




ஐ.பி.எல். வரலாற்றில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலுமே 1000த்திற்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற அரிய சாதனையையும் கிறிஸ் கெயில் தன்வசமே வைத்துள்ளார். சிக்ஸர்களில் மட்டுமின்றி சதங்களிலும் இதுவரை கிறிஸ் கெயிலே முதலிடத்தில் இருந்து வருகிறார். இடது கை ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் விராட்கோலி 5 சதங்களுடன் உள்ளார்.


பந்துகளை சிக்ஸருக்கு மட்டுமே பறக்கவிட்டு பழகிய கிறிஸ் கெயிலுக்கு பவுண்டரிகள் அடிப்பது என்பது அரிது என்பது அவரது சாதனைகளை பார்த்தால் நன்றாகவே தெரிகிறது. அதாவது, ஐ.பி.எல். வரலாற்றிலே யாருமே நெருங்க முடியாத அளவிற்கு சிக்ஸர்களை குவித்து முதலிடத்தில் இருக்கும் கிறிஸ்கெயில், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலில் 405 பவுண்டரிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.




அதிக சிக்ஸர்கள், அதிக சதங்கள என்ற சாதனைகள் மட்டுமின்றி அதிவேக சதம் என்ற சாதனையையும் கிறிஸ் கெயிலே வைத்துள்ளார். ஐ.பி.எல். வரலாற்றிலே 30 பந்துகளில் சதமடித்த வீரர் கிறிஸ் கெயில் மட்டுமே. அந்த போட்டியில் முதல் 17 பந்தில் அரைசதம் அடித்த கெயில், அடுத்த 13 பந்தில் 50 ரன்களை எடுத்து அதிவேக சதத்திற்கு சொந்தக்காரர் என்ற சாதனையை படைத்தார்.


ஐ.பி.எல். வரலாற்றில் யாராலும் நெருங்க முடியாத சகாப்தமாகவே வலம் வந்த கெயில், நடப்பு சீசனில் ஆடாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவே உள்ளது.