பார்டர் – கவாஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தோல்வியுடன் தொடரை தொடங்கியுள்ளது. இரு அணிகளும் மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஜடேஜா, அஸ்வின் அபாரம்:


இந்த போட்டியில் இந்திய அணியின் சுழலில் சிக்கி சின்னாபின்னமாகிய ஆஸ்திரேலிய அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்ததில் ஜடேஜா மற்றும் அஸ்வினின் பங்கு தவிர்க்க முடியாதது ஆகும்.




முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான லபுசேனே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரையும், ரென்ஷா, ஹாண்ட்ஸ்கோம்ப், முர்பி ஆகிய 5 பேரை வீழ்த்தினார். 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரராகிய லபுசேனே மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகிய 2 பேரையும் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 22 ஓவர்களில் 8 ஓவர்களை மெய்டானாக்கி 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 2வது இன்னிங்சில் 12 ஓவர்கள் வீசி 3 ஓவர்களை மெய்டனாக்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அசத்திய அஸ்வின்:


ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டியில் சிம்ம சொப்பனமாக விளங்கிய மற்றொரு வீரர் தமிழ்நாட்டின் ரவிச்சந்திரன் அஸ்வின். ஆஸ்திரேலிய அணி அஸ்வினைப் போலவே பந்துவீசும் வீரரை கொண்டு பயிற்சி மேற்கொண்டும் அவர்களது முயற்சி துளியளவும் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம். அஸ்வின் முதல் இன்னிங்சில் அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் மற்றும் போலந்து ஆகிய மூன்று பேரையும் வீழ்த்தினார். 2வது இன்னிங்சில் 91 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தவர் அஸ்வின்.


உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம், அலெக்ஸ் கேரி என முன்னணி வீரர்களை சீட்டுக்கட்டு போல காலி செய்தார். முதல் இன்னிங்சில் 15.5 ஓவர்கள் வீசி  2 ஓவர்களை மெய்டனாக்கி 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்சில் 12 ஓவர்கள் வீசி 3 ஓவர்களை மெய்டனாக்கி 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளையும் என மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




ஆஸி.க்கு குடைச்சல்:


இரண்டு இன்னிங்சிலும் உள்ள ஆஸ்திரேலியாவின் 20 விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகளை  ரவிச்சந்திரன் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் மட்டுமே காலி செய்தனர். இந்த தொடரில் இவர்கள் இருவர்தான் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய குடைச்சலாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது போலவே, முதல் டெஸ்டிலேயே ஆஸ்திரேலியாவிற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்திவிட்டனர்.


ஜடேஜா இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 240 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, அங்கிருந்து இந்திய அணி 300 ரன்களை கடக்க பக்கபலமாக இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 185 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 70 ரன்களை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த அக்‌ஷர் படேல் 174 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 84 ரன்கள் விளாசி இந்தியா 400 ரன்களை கடக்க உதவினார்.


மேலும் படிக்க: Ind vs Aus 1st test: அஸ்வின், ஜடேஜா சுழலில் சுழன்ற ஆஸ்திரேலியா: முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அசத்தல் வெற்றி...!