நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைதொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அபார சதம் மற்றும் ஜடேஜா, அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 400 ரன்களை சேர்த்தது. இதையடுத்து, 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.


 


சீட்டுக்கட்டாய் சரிந்த ஆஸ்திரேலியா:


இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. குறிப்பாக, தமிழக வீரர் அஸ்வின் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கவாஜா, வார்னர் என 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் 31வது 5-விக்கெட்ஸ் இதுவாகும். அவருக்கு பக்க பலமாக ஜடேஜா மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். படேல் ஒரு விக்கெட்டை வீழ்தினார்.


இன்னிங்ஸ் வெற்றி:


இதனால் அந்த அணி, 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 25 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது. மேலும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.


 


முதல் இன்னிங்ஸ்:


ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இவரும் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அரைசதம் விளாசினர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய  முகமது ஷமி 47 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து டர்பி பந்துவீச்சில் அலெக்ஸ் கேரியிடம் கேட்சானார். இதையடுத்து 400 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட் ஆனது.




 



மர்பி கலக்கல்:


இதனிடையே, ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த மர்பி, தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.  இந்திய அணிக்கு எதிரான போட்டியில்  அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 91 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.