Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வீரர் விவரங்களை அறிவிக்க, ஜனவரி 12ம் தேதியுடன் அவகாசம் முடிவடைய உள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இதனால், இந்திய அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும், ரோகித் சர்மா மற்றும் கோலிக்கு டெஸ்டில் ஓய்வளிக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல்வேறு விவாதங்கள் இணையத்தில் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் தான், நடப்பாண்டில் ஹைப்ரிட் முறையில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரும் நெருங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ள போட்டிக்கான, வீரர்களின் விவரங்களை அறிவிக்க ஜனவரி 12 கடைசி தேதியாகும். இந்த காலக்கெடு நெருங்கி வருவதால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கேப்டன்?
இந்திய அணிக்கான முதல் போட்டி பிப்ரவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வாரா? டாப் ஆர்டரில் யார் இடம்பெறுவார்கள்? பவுலிங் யூனிட் எப்படி இருக்கும் என பல கேள்விகள் நிலவுகிறது. இந்த நிலையில் தான், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் போட்டிகளில் அபாரமான வரலாறை கொண்டிருப்பதால், இந்த போட்டியில் ரோகித் சர்மாவே கேப்டனாகவே தொடருவார் என கூறப்படுகிறது. எனவே, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வியை நீட்டிக்க வேண்டியதில்லை.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்:
இந்திய அணியின் டாப் ஆர்டரில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அனுபவம் காரணமாக இந்த தொடரில் ரோகித் சர்மாவுடன், கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம். அதேநேரம், பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக செயல்பட்ட யஷஷ்வி ஜெய்ஷ்வால், பேக்-அப் வீரராக இணைக்கப்பட வாய்ப்புள்ளது.
விக்கெட் கீப்பர் யார்?
விபத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு இதுவரை ஒரே ஒரு, ஒருநாள் போட்டியில் மட்டுமே ரிஷப் பண்ட் விளையாடியுள்ளார். அதிலும் 6 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஆனால். கே.எல். ராகுல் எந்த விக்கெட்டில் இறங்கினாலும் ரன் சேர்க்க கூடிய திறன் இருப்பதை உறுதிபடுத்தியுள்ளார். இதனால், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கே.எல். ராகுல் தொடர அதிக வாய்ப்புள்ளது.
ஆல்-ரவுண்டர்கள்:
கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்கு வகித்த ஹர்திக் பாண்ட்யா, சாம்பியன்ஸ் ட்ராபியிலும் இந்திய அணியில் முக்கிய பலமாக கருதப்படுகிறார். அவரோடு, ஜடேஜாவும் அணியில் இருக்க அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இணைய வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் இருந்து விடுவிக்கப்படலாம். அதோடு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பங்களித்து வரும், அக்ஷர் படேலும் அணியில் இடம்பெறக்கூடும். இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கும், தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பளிக்கப்படலாம்.
பவுலிங் யூனிட்:
காயம் காரணமாக பும்ரா ஓய்வில் இருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குள் அவர் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் அணியின் பவுலிங் யூனிட்டை வழிநடத்துவார் என்பதோடு, அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்படலாம். அவருக்கு பக்கபலமாக, காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமியும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. கடைசியாக உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக களமிறங்கிய இவர், விக்கெட் வேட்டையை நிகழ்த்தியது குறிப்பிடத்தது. இவர்களுடன் அண்மைக்காலமாக சர்வதேச போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும், அர்ஷ்தீப் சிங், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் அணியில் இடம்பெறலாம்.
உத்தேச வீரர்கள் விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ.), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், சூர்ய குமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரிஷப் பேன்ட் (வி.கீ.)
பேக்-அப்: முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்
உத்தேச பிளேயிங் லெவன்:
- ரோகித் சர்மா (கேப்டன்)
- சுப்மன் கில்
- விராட்கோலி
- ஷ்ரேயாஸ் ஐயர்
- கேஎல் ராகுல் (வி.கீ)
- ஹர்திக் பாண்ட்யா
- ரவீந்திர ஜடேஜா
- முகமது ஷமி
- குல்தீப் யாதவ்
- ஜஸ்பிரித் பும்ரா
- அர்ஷ்தீப் சிங்