இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. அதில் 23ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இந்திய மகளிர் அணி நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியை வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியிருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருந்த இந்திய வீராங்கனை தானியா பாட்டியா ஒரு புகாரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதன்படி, “லண்டன் மேரியட் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளேன். என்னுடைய அறைக்குள் யாரோ ஒருவர் நுழைந்து என்னுடைய பை, பணம், நகைகள் ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார். இந்திய அணியுடன் நான் தங்கி இருந்த போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நிறைந்த ஹோட்டலில் இதுபோன்று பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கருதுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடைசியாக இங்கிலாந்தில் 1999ஆம் ஆண்டு 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. அப்போது சந்தர்கவுந்தா கவுல் கேப்டனாக இருந்தார். அவரும் பஞ்சாபை சேர்ந்தவர். தற்போதைய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் பஞ்சாபை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
39 வயதான ஜூலன் கோஸ்வாமி இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு பிறகு தனது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு பல வீரர்கள், வீராங்கனைகள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஜூலன் கோஸ்வாமி விளையாடியுள்ளார். இவருக்கு முன்னதாக முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 22 ஆண்டுகள் விளையாடி முதலிடத்தில் உள்ளார்.