இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி வரும் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. 


இந்நிலையில் தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து தீபக் ஹூடா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்படலாம் என்று கருதப்படுகிறது. 


 






இந்தியா- தென்னாப்பிரிக்கா தொடர்:


செப்டம்பர் 28- முதல் டி20 போட்டி


அக்டோபர் 2- இரண்டாவது டி20 போட்டி


அக்டோபர் 4- மூன்றாவது டி20 போட்டி


அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி


அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி


அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி


தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து ஷமி விலகினார். அதன்பின்னர் இன்னும் அவர் தன்னுடைய உடற்தகுதியை நிரூபிக்கவில்லை. இது தொடர்பாக பிசிசிஐ தொடர்ந்து மருத்துவர்களிடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. 


ஒருவேளை முகமது ஷமி உடல்தகுதியை நிரூபிக்காத பட்சத்தில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஹர்திக் பாண்ட்யா மற்றும் புவனேஸ்வர் குமார் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில உடல் சார்ந்த கண்டிஷனிங் விஷயத்திற்காக செல்ல உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஒரு போட்டியில் மாற்று வீரர்கள் களமிறக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. 


இதற்கிடையே ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. எனினும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் டி20 தொடர் இது. ஆகவே தென்னாப்பிரிக்க டி20 தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றும் என்று கருதப்படுகிறது. 


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் இந்திய அணி டி20 தரவரிசை பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் நடப்பு ஆண்டில் 21 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நடப்பு ஆண்டில் அதிகமான டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. இந்த வெற்றி பயணத்தை தென்னாப்பிரிக்க தொடரிலும் இந்தியா தொடரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.