இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. இவருக்கும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபலமான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், திடீரென ஸ்மிரிதி மந்தனாவின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஸ்மிரிதி மந்தனா - பலாஷ் முச்சல் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஸ்மிரிதி மந்தனாவின் தந்தைக்கு என்னாச்சு?
இந்த நிலையில் ஸ்மிரிதி மந்தனாவின் தந்தை உடல்நலம் குறித்து மருத்துவர் நமன்ஷா விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், ஸ்மிரிதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸிற்கு இடது பக்கம் மார்பில் வலி ஏற்பட்டதால் மதியம் 1 மணி முதல் 1.30 மணிக்குள் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஏற்பட்டது. அவர் உடனடியாக சாங்க்லியில் உள்ள சர்வித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தொடர்ந்து கண்காணிப்பு தேவைப்படுகிறது. எங்கள் இருதய நோய் நிபுணர் மருத்துவர் ரோகன்தானேதரும் அவரை பரிசோதித்துள்ளார். எக்கோ கார்டியோகிராம் பரிசோதனையில் புதிய பிரச்சினைகள் ஏதும் தெரியவில்லை. அவருக்கு ஆஞ்சியோகிராபி தேவைப்படலாம்.
கண்காணிப்பில் ஸ்மிரிதி மந்தனா தந்தை:
தற்போது, அவரது ரத்த அழுத்தம் சற்று உயர்ந்துள்ளது. இதனால், அவருக்கு தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படுகிறது. திருமண காலம் என்பதால், அதிக பரபரப்பான செயல்பாடுகள் காரணமாக அவருக்கு உடல் மற்றும் மன அழுத்தம் உண்டாகியிருக்கலாம்.
என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் சோகம்:
இதுதொடர்பாக, ஸ்மிரிதி மந்தனாவின் மேலாளர் கூறியிருப்பதாவது, இன்று காலை அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவர் குணம் அடைவார் என்று நாங்கள் காத்திருந்தோம். ஆனால், அவரது உடல்நலம் மோசம் அடையத் தொடங்கியது. நாங்கள் மேற்கொண்டு எந்த ஆபத்தையும் எதிர்கொள்ள விரும்பவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்தோம். அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார் என்று கூறினார்.
ஸ்மிரிதி மந்தனாவின் திருமணம் தடைபட்டது ஒட்டுமாெத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விரைவில் ஸ்மிரிதி மந்தனாவின் தந்தை குணம் அடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ஒட்டுமொத்த நாடே வாழ்த்து தெரிவித்தது. இந்த வெற்றி மகிழ்ச்சியுடன் ஸ்மிரிதி மந்தனாவின் திருமண அறிவிப்பு வீடியோ இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள் புடைசூழ வெளியானது. மேலும், ஸ்மிரிதியின் ஹல்தி வீடியோவும் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. தற்போது ஒத்திவைக்கப்பட்ட ஸ்மிரிதி மந்தனாவின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.