தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இரு அணிகளும் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் நவம்பர் 30ம் தேதி நடக்க உள்ளது. 

Continues below advertisement


இந்திய அணி அறிவிப்பு:


ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கழுத்து வலி காரணமாக கேப்டன் சுப்மன்கில் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. இதையடுத்து, ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற ரோகித் சர்மா - விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். 


கே.எல்.ராகுல் ( கேப்டன்), ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிஷப்பண்ட் ( விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், துருவ் ஜுரல்.


பும்ரா, சிராஜிற்கு ரெஸ்ட்:


ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறாத ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிக்கவில்லை. காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யாவிற்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பிடித்துள்ளார். சென்னை அணியில் புதியதாக இணைந்த சாம்சனுக்கு இந்த முறை அணியில் இடம்கிடைக்கவில்லை.


டெஸ்ட் தொடரில் ஆடி வரும் பும்ரா, சிராஜிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் கம்பீரின் தேர்வாக கருதப்படும் ஹர்ஷித் ராணாவிற்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்களாக பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் களமிறங்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பிடித்துள்ளார். 


அசத்துவார்களா ரோகித் - கோலி?


கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி எந்தவொரு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வெல்லவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. தென்னாப்பிரிக்க அணிக்க எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அசத்திய ரோகித் சர்மா - விராட் கோலி அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


அக்ஷர் படேல், பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் இளம் வீரர் திலக் வர்மா, ஹர்ஷித் ராணா, துருவ்ஜுரல், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணி மிகவும் பலம் மிகுந்ததாகவே உள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருப்பதாக கருதப்படுகிறது.