இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட் திரும்புவது குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதி தொடரில் இருந்து விலகினார். தொடர்ந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இருந்து விலகினார்.
காயம்:
ஐபிஎல் 16வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இவரது தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கிட்டதட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றதுக்கு இவரது கேப்டன்ஷி முக்கிய காரணம். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான போட்டியில், பீல்டிங் செய்யும் போது தொடையில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து கே.எல்.ராகுலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது ஓய்வில் இருக்கிறார்.
இந்தநிலையில், ராகுல் தற்போது முழு உடல் தகுதி பெறும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். அதன் அடிப்படையில் வருகின்ற ஜூன் 13 ம் தேதி முதல் கேஎல் ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தனது பயிற்சியை தொடங்க இருக்கிறார். இதையடுத்து, 2023 ஆசிய கோப்பையில் முழு உடல் தகுதியுடன் அணிக்கு திரும்பி, 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் இடம் பிடிக்க முடியும். ரிஷப் பண்ட் இல்லாத வேளையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது.
இதே நாளில் ஒரு நாளில் போட்டியில் அறிமுகமான கே.எல்.ராகுல்:
இந்திய அணி சார்பில் லோகேஷ் ராகுல் 2016ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ராகுல் தனது முதல் ஒருநாள் போட்டியை ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடினார். அறிமுகமான இப்போட்டியில், சிறப்பான சதம் விளாசி, ஆட்ட நாயகன் விருதையும் ராகுல் வென்றார். இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில், ராகுல் 54 போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 45.13 சராசரியுடன் 1986 ரன்கள் எடுத்துள்ளார்.