சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடத்தும் தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் அசத்திய இந்திய வீரர்களின் விவரங்களை அறியலாம்.


ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்:


இரண்டாவது முறையாக நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. நட்சத்திர வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


வெடித்த மோதல்:


இதையடுத்து ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளில் நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு, இந்திய அணிக்காக முக்கியமான போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்ற ரசிகர்களின் மோதலும் சமூக வலைதளங்களில் வெடித்துள்ளது. இந்நிலையில், ஐசிசியின் நாக்-அவுட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் யார்? என்ற விவரங்களை இங்கு அறியலாம்.


சச்சினின் சாதனையை தகர்த்த கோலி:


டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் 42 ரன்களை எட்டியபோது, ஐசிசியின் நாக்-அவுட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார். தொடர்ந்து 49 ரன்களை சேர்த்து இருந்தபோது அவர் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐசிசி தொடரில் 18 நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி கோலி 665 ரன்களை குவித்து முதலிடம் பிடித்துள்ளார். 


பேட்டிங்கில் அசத்தும் இந்திய வீரர்கள்:


தொடர்ந்து, ஐசிசி நடத்தும் தொடர்களில் 14 நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி, 657 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா 17 நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி 620 ரன்களையும், சவுரவ் கங்குலி வெறும் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 514 ரன்களையும் குவித்துள்ளார். யுவராஜ் சிங் 14 போட்டிகளில் விளையாடி 458 ரன்களையும், தோனி 13 போட்டிகளில் விளையாடி 309 ரன்களையும் சேர்த்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, ஐசிசி தொடரின் நாக்-அவுட் சுற்றுகளில் வெறும் 8 போட்டிகளிலேயே 500 ரன்களை கடந்து, அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளார்.


இந்த கணக்கும் இருக்கு..!


மேலே குறிப்பிட்ட வீரர்களின் பட்டியலில் கோலி, ரோகித் சர்மா மட்டுமே ஐசிசி நடத்திய அனைத்து விதமான தொடர்களிலும் விளையாடியுள்ளனர். அதாவது, ஒருநாள் உலகக்கோப்பை, டி-20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என அனைத்து விதமான தொடர்களிலும் விளையாடியுள்ளனர். இருவருமே இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையிலும், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுள்ள ஐசிசி தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.