இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அதனை அடுத்து, இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் நாளை தொடங்க உள்ளது.
முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% ரசிகர்களுக்கு அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு பிசிசிஐ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், பெங்களூருவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியை காண அதிக அளவிலான ரசிகர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாலும், டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்ததாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கர்நாடக மாநில கிரிக்கெட் அமைப்பு தெரிவித்திருக்கிறது. 50% பார்வையாளர்களுக்கு என அறிவித்திருந்தபோது வைக்கப்பட்டிருந்த 10,000 டிக்கெட்டுகள் இரண்டு நாட்களில் விற்றுத்தீர்ந்துள்ளது. இந்நிலையில், மீதம் இருக்கும் டிக்கெட்டுகள் மார்ச் 11-ம் தேதி காலை முதல் விற்பனையாக உள்ளது.
டிக்கெட் விவரம்:
அதிகபட்சமாக கிராண்ட் டெர்ரேஸ் ஸ்டேடியம் - நாளொன்றுக்கு 1250 ரூபாய்
குறைந்தபட்சமாக ஜி அப்பர், ஜி லோயர் 1,2 - 150 ரூபாய்
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். மேலும், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அல்லது போட்டி டிராவானால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அதிரடி காட்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்