மகளிர் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் இன்று ஹாமில்டனில் மோதியது. இதில், நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து வீராங்கனையை இந்திய வீராங்கனை வஸ்தரகார் துல்லியமான த்ரோவால் ரன் அவுட் செய்தார்.




இதையடுத்து, நியூசிலாந்து கேப்டன் சோபி டெவினும், அமெலியா கெர் நிதானமாக துரிதமாக ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் சோபி டெவின் 30 பந்தில் 7 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாட்டர்வெயிட்டும் அதிரடியாக ஆடி நியூசிலாந்து ரன்கள் சீராக உயர்ந்தது.


அரைசதம் அடித்த நிலையில் அமெலியா 50 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேடி கிரீனும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய எமி சாட்டர்வெயிட் 84 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேட்டி மார்டின் மட்டும் சிறப்பாக ஆடி 41 ரன்கள் குவிக்க, கடைசி கட்ட வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்தரகர் மட்டும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.




அடுத்து 261 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்மிரிதி மந்தனா 6 ரன்களில் ஆட்டமிழக்க, தீப்தி சர்மாவும் 5 ரன்களில் அவுட்டானார். பின்னர், கேப்டன் மிதாலி ராஜூம், தொடக்க வீராங்கனை யாஸ்திகா பாட்டீயாவும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். அணியின் ஸ்கோர் 50 ஆக உயர்ந்தபோது யாஸ்திகா பாட்டீயாவும் ஆட்டமிழந்தார்.


அடுத்து ஜோடி சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுரும், மிதாலிராஜூம் நிலைத்து நின்று ஆடினர். மிதாலி ராஜ் 56 பந்தில் 1 பவுண்டரியும் 31 ரன்கள் எடுத்த நிலையில், அவுட்டானார். அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் தனி ஆளாக இந்திய அணிக்காக போராடினார். ரிச்சா கோஷ், சினேக் ராணா, பூஜா வத்ஸ்ரகர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 8வது விக்கெட்டாக ஹர்மன்பிரீத் கவுர் வெளியேறினார். அவர் 63 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்திருந்தார்.




கடைசியில் இந்திய அணி 46.4 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், நியூசிலாந்து அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக லீ டகுகு, அமெலியா கெர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி இந்த போட்டியில் நியூசிலாந்து அணியிடம் வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண