வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இருந்து அனுபவ டெஸ்ட் பேட்ஸ்மேன் சேதேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டார். இதையடுத்து வரும் ஜூன் 28ம் தேதி தொடங்கும் துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டல அணிக்காக களமிறங்குகிறார். 


அடுத்த மாதம் தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அணியில் இருந்து புஜாராவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நீக்கியது. காரணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் புஜாரா 14 மற்றும் 27 ரன்களை எடுத்தார். இதையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்கள் புஜாரா விளையாடிய 3வது இடத்திற்கு போராடுவார்கள். 


இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பாக செயல்பட்டார். அதிலும் குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடர் வெற்றிகளிலும் அசத்தினார். 2018-19 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்டில் 521 ரன்களையும், 2020-21 ம் ஆண்டு 271 ரன்களையும் எடுத்தார். 


துலீப் டிராபி விளையாடும் சூர்யகுமார் யாதவ்: 


இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும் மேற்கு மண்டல அணிக்காக துலீப் டிராபியில் விளையாட இருக்கிறார். இன்னும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 இந்திய அணி அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டவுடன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மீண்டும் துணை கேப்டனான அஜிங்க்யா ரஹானே : 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெஸ்ட் அணிக்கு திரும்பிய அஜிங்க்யா ரஹானே சிறப்பாக செயல்பட்டார். அந்த போட்டியில் 89 மற்றும் 46 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தார். இதையடுத்து, மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். 


இந்திய டெஸ்ட் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் 15 முதல் தர போட்டிகளில் 80.21 சராசரியில் 9 சதங்களுடன் 1845 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், கெய்க்வாட், 28 முதல் தர ஆட்டங்களில் 42.19 சராசரியில் 6 சதங்களுடன் 1941 ரன்கள் எடுத்துள்ளார்.


டெஸ்ட் போட்டியை தொடர்ந்து வலது கை வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார், ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர் முதல் தர போட்டியில் 39 போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி- ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின் , ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட் மற்றும் நவ்தீப் சைனி.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அட்டவணை



  • முதல் போட்டி: (ஜூலை 12 - ஜூலை 16 வரை), புதன் முதல் ஞாயிறு - வின்ட்சர் பார்க், ரோசோ, டொமினிகாவில். 

  • இரண்டாவது போட்டி: (ஜூலை 20 - ஜூலை 24 வரை), வியாழன் முதல் திங்கள் - குயின்ஸ் பார்க் ஓவல், போர்ட் ஆஃப் ஸ்பெயின், டிரினிடாட்டில்