ஜுன் 23, 2007 - இந்த தேதி ரோகித் ஷர்மா கிரிக்கெட் வாழ்வில் மிகவும் முக்கியம் வாய்ந்தது. 16 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், ரோஹித் சர்மா தனது முதல் டி20 ஐ இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார். இந்த நாள் ரோகித் ஷர்மாவுக்கு ஒரு வகையில் ஸ்பெஷல் என்றாலும், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டுக்கே ஸ்பெஷலான நாளும் கூட. இந்திய அணி 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராஃபி வென்ற தினமும் இதுதான். அந்த அணியிலும் இடம் பிடித்திருந்த ரோஹித்திற்கு இந்த நாள் மேலும் ஸ்பெஷல் ஆகிறது.
உலகக்கோப்பையில் நேரடியாக அறிமுகம்
சீனியர் வீரர்கள் பலர் டி20 கிரிக்கெட் ஃபார்மட்டை ஆட மாட்டோம் என்று கொடி பிடிக்க, பிசிசிஐ இளம் வீரர்கள் கொண்ட அணியை தோனியின் தலைமையில் களம் இறக்கியது. அப்படி நேரடியாக டி20 உலகக்கோப்பையில் இடம் பிடித்த வீரர்தான், ரோஹித் ஷர்மா. 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 8 கட்டத்தின் போது இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் அறிமுகமானபோது மும்பையைச் சேர்ந்த பேட்டர் ரோஹித் ஷர்மாவுக்கு 20 வயதுதான்.
முதல் போட்டியில் என்ன செய்தார் ரோஹித்
ரோஹித் ஆரம்பத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மெனாகதான் உள்ளே வந்தார். அதனால், ரோஹித்துக்கு அந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் அவர் இங்கிலாந்து அணியின் விக்ரம் சோலங்கி 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தபோது, அவர் கேட்சை பிடித்து சர்வதேச கிரிக்கெட் ஸ்கோர் புக்கில் தனது பெயரை பதிவு செய்தார். அந்த போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 சாதனைகள்
பின்னர் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடத் தொடங்கியதிலிருந்து, ரோஹித் தற்போது நீண்ட தூரம் வந்து கேப்டனாக மாறிவிட்டார். டி20 போட்டிகளை பொறுத்தவரை ரோஹித் ஷர்மா இதுவரை 148 போட்டிகளில் விளையாடி, 139.24 ஸ்ட்ரைக் ரேட்டில், 3853 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஆவரேஜ் 31 ஆக உள்ள நிலையில், அதிகபட்சமாக 118 ரன்கள் குவித்துள்ளர். இதுவரை 4 சதங்கள் அடித்துள்ள அவர், 29 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள், டெஸ்ட் சாதனைகள்
ஒருநாள் போட்டிகளில் இதுவரை 243 போட்டிகளில் விளையாடி, 90 ஸ்ட்ரைக் ரேட்டில், 9825 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஆவரேஜ் 48.63 ஆக உள்ள நிலையில், அதிகபட்சமாக 264 ரன்கள் குவித்துள்ளர். இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ரன் ஆகும், இதுவரை இவரது சாதனை எவராலும் முறியடிக்கப் படவில்லை. இதுவரை 30 சதங்கள் அடித்துள்ள அவர், 48 அரைசதங்கள் அடித்துள்ளார். ரோஹித் இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 45 ஆவரேஜில், 3437 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் குவித்துள்ள அவர், 9 சதங்களையும், 14 அரைசதங்களையும் அடித்துள்ளார்.