இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்தபோட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நான்காவது டெஸ்ட்:
இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்தது. பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களில் சுருண்டது. அதன்படி, இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியினரின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தான்.
அந்த வகையில் 15.5 ஓவர்களை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் 51 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல், ரவீந்திர ஜடேஜா 20 ஓவர்கள் வீசி 5 ஓவர்களை மெய்டன் செய்து 56 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 15 ஓவர்கள் வீசி 2 ஓவர்கள் மெய்டன் செய்து 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதன்படி, இந்த இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கின்றனர்.
சுழற்பந்தில் சாதனை:
இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10-விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் வீழ்த்தினார்கள். அந்த போட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள்.
2021 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் 10-விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சளர்கள் வசமே சென்றது. அதன்படி, அக்ஸர்படேல் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: DC VS MI WPL 2024: கடைசி பந்தில் சிக்ஸர்...டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
மேலும் படிக்க: Chris Gayle IPL Record: IPL-ல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்...கிறிஸ் கெய்லின் சாதனை!